சசிகலா வேண்டாம்; தமிழ் மாணவியை வைத்து ஜல்லிக்கட்டை நடத்துங்கள் - சுப.உதயகுமாரன்

செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:37 IST)
அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்க, அந்த ஊர் மக்கள் அனுமதிக்கக்கூடாது என சமூக ஆர்வலர் சுப. உதயகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அலங்காநல்லூர் கிராம மக்கள் நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை நேரில் சந்தித்து, பிப். 10ம் தேதி தங்கள் ஊரில்  நடைபெறவுள்ள ஜல்லிகட்டிற்கு அழைப்பு விடுத்தனர். மேலும், விழாவை துவங்கி வைக்க வேண்டும் என சசிகலாவிற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுப. உதயகுமாரன் தன்னுடையை முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கிவைக்கக் கூடாது. போராடிய மாணவர்களை, இளைஞர்களை, மீனவர்களை, பொதுமக்களை அடித்து, உதைத்து, அவமதித்து, அழிமதி செய்து, அவர்கள் மீது பொய் வழக்கும் போட்ட ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் எந்த தார்மீக அடிப்படையில் இந்தப் பொறுப்பை ஏற்க விரும்புகிறார்?


 

 
அலங்காநல்லூர் மக்கள் அவர்களுக்காக, தமிழினத்திற்காகப் போராடிய தமிழ் மாணவர்களை, இளைஞர்களை அவமதிக்கக் கூடாது. ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள். வையகம் உங்களைப் போற்றும். தகுதியற்றவர்கள், துரோகிகளுக்கு அந்தப் பெருமையைக் கொடுத்தால், வையகம் உங்களைத் தூற்றும்.
 
அலங்காநல்லூர் தமிழினத்தின் அடங்காநல்லூராக இருக்கட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்