ஜல்லிக்கட்டிற்கு அழைப்பு - மீண்டும் அலங்காநல்லூருக்கு செல்வாரா ஓ.பி.எஸ்?

திங்கள், 30 ஜனவரி 2017 (19:24 IST)
விரைவில் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டிற்கு நேரில் வந்து சிறப்பிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு அந்த ஊர் மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


 

 
ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், நிரந்தர சட்டத்தை இயற்றும் வரை போராட்டம் நீடிக்கும் என போராட்டக்காரர்கள் அறிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைப்பதற்காக கடந்த 22ம் தேதி முதல்வர் ஓ.பி.எஸ் மதுரை சென்றார். ஆனால், அவசர சட்டத்தை நிறைவேற்றாமல் ஜல்லிகட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம் என கூறிய அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் ஓ.பி.எஸ் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.
 
அதன்பின் கடந்த 23ம் தேதி, சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனவே, பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டை நடத்த அந்த ஊர்கமிட்டி மக்கள் முடிவு செய்தார்கள். ஆனால்,  அந்த தேதியும் மாற்றியமைக்கப்பட்டு, வருகிற 10ம் தேதி என இறுதியாக முடிவு செய்யப்பட்டது. 
 
தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. எனவே, முதல்வரை இன்று நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி தர வேண்டும் என விழா குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் அவர்கள் சசிகலாவிற்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.
 
எனவே, யார் போட்டியை தொடங்கி வைப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்