ஜல்லிகட்டுக்கு அனுமதி வேண்டும் என மதுரை அலங்காநல்லூர், சென்னை, கோவை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை அதிகாலை முதல் சென்னை, மதுரை உட்பட போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களில் இருந்தும், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வெளியேற மறுத்துவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
மதுரை அலங்காநல்லூரில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று வருகிற பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டை நடத்துகிறோம் என அந்த ஊர் கமிட்டி முடிவு செய்தது. ஆனால், போராட்டக்காரர்கள் ஊர் கமிட்டியின் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் மீது மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். எனவே, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் “அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை” என ஒரு பதிவிலும், “இது மிகவும் தவறான ஒன்று. மாணவர் மீது போலீசாரின் அடக்குமுறை நல்ல முடிவை கொண்டு வராது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.