ஹிப்ஹாப் தமிழா ஆதி, சில மாதங்களுக்கு முன் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரு பாடலை வெளியிட்டிருந்தார். இந்தப்பாடல் இளைஞர்கள் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றது. அந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிகட்டு நிரந்தரமாக நடைபெற வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பட இடங்களில் இளைஞர்கள் போராடி வந்தனர். அந்த போரட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், தொடக்கம் முதல் இளைஞர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆதி, திடீரென நேற்று மாலை ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் மாணவர்களின் போராட்டம் வேறு திசையில் செல்வதாக தனது அச்சத்தை தெரிவித்திருந்தார். இவரின் கருத்து போராட்டக்காரர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரின் கருத்துக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆதியின் கருத்து பற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி “ஆதி தெரிவித்துள்ள கருத்து போராட்டக்காரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்கள். உலகமே அதை பாராட்டி வருகிறது. அவருக்கு உடன்பாடு இல்லையெனில் அவர் அமைதியாக இருந்து விடவேண்டும். அதை விட்டு விட்டு வீடியோ வெளியிட்டு பிரச்சனையை பூதாகாரமக ஆக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.
அதேபோல் இயக்குனர் கரு.பழனியப்பன் தன் டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி 2 வீடியோ பதிவுகளை அவர் பதிவு செய்துள்ளார். அதில் “ காவிரி நீர் முதல் பல பிரச்சனைகளில் தாங்கள் ஒடுக்கப்படுவதை எண்ணி, தன்னெழுச்சியாக மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர். அவர்களை கலைந்து செல்லுமாறு கூற யாருக்கும் உரிமை இல்லை. இந்த கூட்டம் ஹிப் ஹாப் ஆதி கூட்டிய கூட்டம் இல்லை. அவருக்கு விருப்பம் இல்லையெனில், இசையமைக்கும் வேலையை மட்டும் அவர் தொடர்ந்து செய்யலாம்” என காட்டமாக தெரிவித்தார்.