பொதுவாக வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்துக்காக கொண்டு வரப்பட்டதாக இருந்தாலும், அதில் அதிகம் போலியான தகவல்களும், செய்திகளும் அதிக அளவில் பரவி வருகின்றன. பிரபல நிறுவனங்கள் ஆஃபர் வழங்குவதாக கூறி லிங்க் அனுப்பி அதன் மூலம் பணம் திருடும் கும்பல்களும் அதிகமாகிவிட்டார்கள்.
தற்போது வாட்ஸ் அப் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறி ஒரு லிங்க் ஷேர் ஆகி வருகிறது. இந்த லிங்கை நீங்கள் க்ளிக் செய்து உள்ளே போனால் ஏகப்பட்ட விளம்பரங்கள் மொபைல் திரையில் வட்டமடிக்கும். அதையெல்லாம் க்ளோஸ் செய்துவிட்டு உள்ளே போனால் சில கேள்விகள் கேட்பார்கள். அதற்கு சரியான பதில்களை கொடுத்துவிட்டால் கடைசியாக ஒரு ஆப்ஷன் வரும். அதில் இதை குறைந்தது 30 பேருக்காவது ஷேர் செய்தால்தான் 1000 ஜிபி டேட்டா கிடைக்கும் என வரும். உடனே உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள 30 பேருக்கு அல்லது குழுக்களில் அதை ஷேர் செய்வீர்கள். ஆனால் ஷேர் செய்து முடித்த பிறகும் உங்களுக்கு எந்த டேட்டாவும் கிடைக்காது.
இதனால் அவர்களுக்கு எப்படி லாபம் என உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். எல்லாமே “க்ளிக் வருமானம்”தான். ஷேர் செய்யப்படும் லிங்குகளை ஒவ்வொருவரும் க்ளிக் செய்யும்போது திரையில் ஏகப்பட்ட விளம்பரங்கள் தோன்றுகிறது அல்லவா? அதை வைத்துதான் அவர்கள் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் ஏமாந்து போனாலும் உங்களுக்கு அடுத்து 30 பேர் ஏமாறுவதற்கான வாய்ப்பையும் நீங்களே ஏற்படுத்தி கொடுத்து விடுகிறீர்கள். இதனால் சில மணி நேரங்களிலேயே அவர்கள் கணிசமான தொகையை சம்பாதித்து விட முடியும்.
தற்போது வாட்ஸப் நிறுவனம் தாங்கள் எந்தவிதமான சலுகைகளையும் வழங்கவில்லை என அறிவித்துள்ளது. ஆகவே இதுபோன்ற செய்திகள் வாட்ஸ் அப் வழியாக வந்தால் அதை கிளிக் செய்யவோ அல்லது அடுத்தவருக்கு பகிரவோ வேண்டாம். இதற்கு முன் இதே போல அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களின் பெயரில் மோசடி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.