3-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஜன.30ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (12:55 IST)
புது டெல்லி: மூன்றாம் தலைமுறை செல்பேசி ஸ்பெக்ட்ரம் (அலைவரிசை) ஒதுக்கீடு ஏலத்தை தொலைத் தொடர்புத் துறை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து வரும் ஜனவரி 30ஆம் தேதி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதேபோல் பிராட்பேண்ட் ஒயர்லெஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏலங்களுக்கான இரண்டு முக்கிய முடிவுகள் மீதான மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இன்னமும் அரசு தரப்பிலிருந்து எந்த வித பதிலும் இல்லாத காரணத்தினால் ஏலங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு சரகத்திற்கும் 5 புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான முன்மொழிவு காரணமாகவும், ஏலத்தில் ஒப்பந்தப் புள்ளி அனுப்பவுள்ள சில முக்கிய நிறுவனங்கள் ஏல விதிகளை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை என்று கோரிக்கை வைத்ததும் ஏல தேதி தள்ளி வைப்பிற்கான காரணங்கள் என்று தொலைத் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏலங்கள் தற்போது நடைபெறுவது குறித்து ரிலையன்ஸ் உள்ளிட்ட சி.டி.எம்.ஏ சேவை நிறுவனங்களுக்கும், ஜி.எஸ்.எம். சேவை நிறுவனங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

சி.டி.எம்.ஏ. நிறுவனங்கள் ஏலம் தற்போது நடைபெறுவது நல்லதல்ல என்றும், ஜி.எஸ்.எம். நிறுவனங்கள் தற்போது நடைபெறுவதுதான் சிறந்தது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்