2,100 இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வேலையிழக்கின்றனர்

சனி, 11 ஏப்ரல் 2009 (12:51 IST)
தகவல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமாகக் கருதப்படும் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் 2,100 பேரை பணியை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.

மோசமான வேலைத் திறன் மற்றும் இருக்கும் பணியாளர்களை அதிகபட்சமாக பயன்படுத்துவது என்கின்ற புதிய கொள்கையின் படி இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"இந்த ஊழியர்களில் சிலரை நிறுவனத்தை விட்டு செல்லுமாறும், சிலரை அவர்கள் விருப்பத்திற்கும் விட்டுள்ளோம்" என்று பெங்களூர் நகரத்தின் இன்ஃபோசிஸ் மைய தலைமை அதிகாரி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் முன் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியில் அவர்களை ஈடுபடுத்தி வருவதாகவும், அதிலும் மேம்பாடு அடைய முடியாத ஊழியர்களை விலகுமாறு கோரப்படுவதாகவும் பாலகிருஷ்ணன் மேலும் கூறுகையில் தெரிவித்தார்.

"நடப்பு பொருளாதார சூழ் நிலையை வைத்துப் பார்க்கும்போது மோசமான பணித்திறனை சகித்துக் கொள்வது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

பொதுவாக பணித்திறன் குறைபாடு உடையவர்கள் தாங்களாகவே பணித்திறனை மேம்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்படும், ஆனால் இந்த முறை அது போன்ற வாய்ப்புகள் எதுவும் அளிக்கும் நிலைமை இல்லை." என்று கூறிய பாலகிருஷ்ணன், இது போன்ற ஆட்குறைப்பு ஆண்டு தோறும் செய்யப்படுவதுதான் என்றார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பயிற்சி ஊழியர்கள் உட்பட 1,05,000 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்