சைபர் - இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல்: சரஸ்வத்

வெள்ளி, 11 பிப்ரவரி 2011 (14:40 IST)
எல்லா தொழில்நுட்பங்களின் சங்கமாகத் திகழும் இணைய வலைப்பின்னலால் இந்தியாவிற்கு புதிய அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார்.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஆசிய விமான கண்காட்சியில் கலந்து கொண்டு இன்று காலை உரை நிகழ்த்திய வி.கே.சரஸ்வத், “தகவல் தொழில் நுட்பத்தால் மையப்படுத்தப்பட்ட வலைப் பின்னல் அமைப்பைச் சார்ந்தே நமது நடவடிக்கைகள் யாவும் உள்ளதால், சைபர் பாதுகாப்பு என்பது நமக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது” என்று கூறினார்.

வலைப் பின்னல் அமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாகும் என்று கூறிய சரஸ்வத், “இந்த அச்சுறுத்தலை பொறுத்தவரை, அது நிலையானதும் இல்லை, உறுதியானதும் இல்லை, அது நாளுக்கு நாள் வளர்ந்து வரக்கூடியது. தரை, நீர், விண் போன்ற அச்சுறுத்தல்களைப் போல் இப்போது பொருளாதார, சைபர் அச்சுறுத்தல்கள் புதிதாய் முளைத்துள்ளன” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்