இணையத்தின் வாயிலாக பஸ் டிக்கட்!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (19:50 IST)
இந்தியாவில் இணையத்தின் மூலமாக பேருந்து பயணச் சீட்டை வழங்கும் ரெட்பஸ் டாட் இன் என்ற நிறுவனம், இணையத்தின் மூலமாக பயணச் சீட்டு வழங்கும் தனது சேவையை சென்னையிலும் துவக்கி உள்ளது.

இந்நிறுவனம் கடந்த மூன்று மாதமாக சோதனை அடிப்படையில் பயணச் சீட்டு வழங்கி வந்தது. இப்போது முழு அளவில் இணையத்தின் மூலம் பயணச் சீட்டு வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் வர்த்தக தலைமை நிர்வாகி மயான்க் பிடாவட்கா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் இணையத்தின் வாயிலாகவும், மற்ற முறையிலும் அதிகளவு பேருந்து பயணச் சீட்டுகள் விற்பனையாகின்றன. இதனால் தான் சென்னையிலும் நாங்கள் இணையம் மூலம் பயணம் வழங்கும் சேவையை துவக்கி உள்ளோம்.

இந்தியாவில் இணைய தளம் வாயிலாக பேருந்து பயணச் சீட்டு வழங்கும் நிறுவனங்களில் www.redbus.in என்ற இணைய தளமமுன்னணி நிறுவனமாக இருக்கின்றது. நாங்கள் 14 மாநிலங்களில் பேருந்து பயணச் சீட்டை இணையம் மூலம் வழங்கி வருகின்றோம். இதற்காக ஆறு நகரங்களில் அலுவலகத்தை வைத்துள்ளோம். எங்கள் இணைய தளத்தின் வாயிலாக பயணம் செய்யும் பேருந்து, குளிர் சாதன வசதி உள்ளதா அல்லது எந்த வகை பேருந்து, பயணச் இருக்கை, பயணச் சீட்டை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உங்கள் வசதிக்கு ஏற்ற படி பெற்றுக் கொள்வது, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், ரொக்கமாக பணம் செலுத்துதல் ஆகிய வசதிகள் உள்ளன.

சமீப காலத்தில் தான் இணையத்தின் மூலமாக பேருந்து பயணச் சீட்டுகள் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணையத்தின் மூலம் எவ்வித அலைச்சலும் இல்லாமல், நமக்கு தேவையான பேருந்து, இருக்கை, வசதியான நேரத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. எங்கள் இணைய தளத்தின் சேவையில் அதிகளவு பேருந்து இயக்கும் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
நாங்கள் கூடிய விரைவில் செல் போன் மூலமாகவும் பேருந்து பயணச் சீட்டை பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்த உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்