ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் புதிய சாதனை

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2013 (16:44 IST)
FILE
உலக அளவில் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) முதல் முறையாக சாதாரண செல்போன்கள் விற்பனையை ஸ்மார்ட்போன் விஞ்சியுள்ளது.

இக்காலாண்டில் மொத்த செல்போன் விற்பனையில் ஸ்மார்ட் போன்களின் பங்களிப்பு 51.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஐ.டி. ஆராய்ச்சி நிறுவனமான கார்ட்னரின் தலைமை ஆய்வாளர் அன்ஷுல் குப்தா தெரிவித்தார்.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சாதாரண போன்களின் விற்பனை சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட 21 சதவீதம் குறைந்து 21 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், ஸ்மார்ட்போன்களின் விற்பனை 46.5 சதவீதம் அதிகரித்து 22.50 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகின் அனைத்து பகுதிகளிலும் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் 74.1 சதவீதமும், லத்தீன் அமெரிக்காவில் 55.7 சதவீதமும், கிழக்கு ஐரோப்பாவில் 31.6 சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளது.

மொத்த ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாம்சங் நிறுவனம் 31.7 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இது 29.7 சதவீதமாக இருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை 10.2 சதவீதம் அதிகரித்து 3.20 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் 14.2 சதவீத சந்தை பங்களிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் லெனோவா ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு முறையே 5.1 மற்றும் 4.7 சதவீதமாக உள்ளது. இசட்.டி.இ. நிறுவனம் 4.3 சதவீத சந்தை பங்களிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்