தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியில் தேக்கம்

புதன், 24 ஜூன் 2009 (16:16 IST)
இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பச் சார்புத் துறை ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 10.8 விழுக்காடாக இருக்கும் என்று கனிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தை ஒப்பு நோக்கும்போது குறைவானது என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் சுமார் 13.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டு இந்த துறைகளின் வருவாய் 110 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஐ.டி.சி. ஆய்வறிக்கை கூறுகிறது.

நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள தேக்கம் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் என்று ஐ.டி.சி. தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தகவல் தொழில் நுட்பத் துறை வருவாய் 57 பில்லியன் டாலர்களாக உள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் 12.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறியுள்ள ஐ.டி.சி. 2013ஆம் ஆண்டு வருவாய் 3,28,081 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது. இது 2008ஆம் ஆண்டு 1,80,064 கோடியாக இருந்தது.

அதே போல் தகவல் தொழில் நுட்பத் துறையின் 2009 ஆம் ஆண்டு உள் நாட்டு வருவாய் ரூ.3,09,573 கோடியாக அதிகரிக்கவுள்ளது. இதில் உள் நாட்டு சந்தை ரூ.1,09,406 கோடி பங்களிப்பு செய்கிறது. ஏற்றுமதி வருவாய் ரூ.2,00,168 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்