குளோபல் இந்தியன் நெட்வொர்க் திட்டத்திற்கு விரைவில் இணையதளம்

வியாழன், 30 ஜூலை 2009 (13:51 IST)
வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் இந்திய வளர்ச்சிக்காக அறிவு சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் அறிவித்த ‘குளோபல் இந்தியன் நெட்வொர்க் ஆஃப் நாலெட்ஜ’ திட்டத்திற்கான இணையதளம் விரைவில் துவக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அயல்நாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி, குளோபல் ஐ.என்.கே (குளோபல் இந்தியன் நெட்வொர்க் ஆஃப் நாலெட்ஜ்) திட்டத்திற்காக உருவாக்கப்படும் இணையதளம், பல்வேறு துறைகளில் உள்ள அயல்நாடு வாழ் இந்தியத் தலைவர்களை மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அறிவுசார் பயனாளர்களை ஒருங்கிணைக்கும் தளமாக திகழும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கான யோசனைகளை உருவாக்குவதும், தொழில்நுட்பம் மற்றும் புதிய படைப்புகளின் உதவியுடன் வளர்ச்சிக்கு தேவையான காரணிகளை அடையாளம் காண்பதும் இந்த இணையதளத்தின் உருவாக்கத்திற்கு அடிப்படைக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ள வயலார் ரவி, இந்தியாவின் வளர்ச்சிப் பணிகளுக்கான அறிவுசார் யோசனைகளை வழங்கும் தளமாக இது திகழும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்