ஐ.டி.யில் வேலை தாவலைத் தடுக்க 3 மாத முன் அறிவிக்கை

வியாழன், 23 டிசம்பர் 2010 (16:29 IST)
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்யும் நெறிஞர்கள், நினைத்தவுடன் வேலையை விட்டு விலகி, நல்ல ஊதியம் கிடைக்கும் நிறுவனத்தில் சேரும் தாவலைத் தடுக்க 3 மாத முன் அறிவிக்கையை ஐ.டி. நிறுவனங்கள் கட்டாயமாக்கியுள்ளன.

உலகளாவிய பொருளாதார பின்னடைவிற்குப் பின் மீண்டும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் செழிப்பாக வளர்ந்துவரும் நிலையில், பசுமையான பணிகளைத் தேடிச் செல்லும் தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள், ஒரு மாத கால முன் அறிவிக்கை செய்துவிட்டு, வேறு பணியை நாடுகின்றனர். இதனால், குறித்த நேரத்தில் பணிகளை முடித்துக் கொடுக்க முடியாமல் நிறுவனங்கள் திணறுகின்றன.

அதுமட்டுமின்றி, சரியாக பணியாளர்களை இழுக்கும் நிறுவனங்கள், உடனடியாக அவர்கள் பணியில் சேர, அவர்கள் ஒரு மாத அறிவிக்கைக்கு பதிலாக இழக்கும் ஊதியத்தை கொடுத்துவிட்டு பணிக்கு எடுத்துக் கொள்கின்றன.

இதனைத் தடுக்க, உள்ளூர், பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களான ஐபிஎம்-மில் இருந்து இன்ஃபோடெக் வரை 3 மாத கால முன் அறிவிக்கை செய்ய வேண்டும் என்ற கட்டாய பணி விலகலை நிபந்தனையை விதிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது, தரமான பணியாளர்களை இழுக்கும் நிறுவனங்களின் வழிமுறைகளையும் தடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

நிறுவனங்களுக்கு இது வழியென்றால், எல்லாம் வல்ல தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களும் ஒரு வழியை கண்டுபிடிப்பார்கள் அல்லவா?

வெப்துனியாவைப் படிக்கவும்