இந்தியர்களின் பணி வாய்ப்பை பாதிக்கும் அமெரிக்க சட்ட திருத்தம்!

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:41 IST)
இந்தியாவிலிருந்து பெருமளவிற்கு சென்று அமெரிக்காவில் பணியாற்றிவரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் ஒரு சட்டத் திருத்தத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து தூக்கி நிறுத்தும் அமெரிக்க அரசின் ‘டார்ப்’ திட்டத்தின் (Troubled Assets Relief Programme - TARP) கீழ் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் எதுவும் அயல்நாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறுகிறது.

பணிக்காக அயல்நாட்டினர் அமெரிக்காவிற்கு வர வழி செய்யும் ஹெச். 1 பி விசா சட்டத்தில் இந்தத் திருத்தத்தை அந்நாட்டு செனட்டின் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் முன்மொழிந்துள்ளார். இதனை குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் சக் கிராஸ்லி வழிமொழிந்துள்ளார்.

இந்தத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் அது ஹெச் 1 பி விசா பெற்று பணிக்குச் செல்லும் இந்தியாவைப் போன்ற அயல்நாட்டுப் பணியாளர்களை - குறிப்பாக தகவல் தொழி்ல்நுட்ப நெறிஞர்களைப் பாதிக்கும் என்பதோடு, வேலை இழப்பிற்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

ஏனெனில், அமெரிக்க அரசின் டார்ப் நிதித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் நிறுவனங்கள், நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அமெரிக்க பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் பணி வாய்ப்பை காப்பாற்ற மற்ற நாட்டு பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும் என்று திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்திற்கான அவசியம் என்னவென்று வினவியபோது, அதற்குப் பதிலளித்த பெர்னி சாண்டர்ஸ், அமெரிக்க வங்கிகள் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஹெச் 1 பி விசா அடிப்படையில் 21,000 அயல்நாட்டுப் பணியாளர்களை புதிதாக நியமனம் செய்ய அனுமதி கோரி அமெரிக்க அரசிற்கு விண்ணப்பித்துள்ளன. இது அமெரிக்கர்களுக்கு கிடைக்கூடிய பணி வாய்ப்பைப் பாதித்துள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்