இணையம் வாயிலாக தங்க வர்த்தகம்!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (19:02 IST)
அயல் நாட்டு தங்க சந்தைகளுக்கு இணையாக இந்தியாவிலும் இணையம் வாயிலாக தங்கம் வர்த்தகம் தொடங்க உள்ளது.

பில்லியன் ஸ்பாட் மார்க்கெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணைய தங்க வர்த்தக நிறுவனத்தை, மும்பை பில்லியன் அசோசிசன் ( மும்பை தங்க வெள்ளி வர்த்தகர்கள் சங்கம்), ரிலையன்ஸ் மணி, மும்பை பங்குச் சந்தை, தேசிய பல்பொருள் வர்த்தக சந்தை ஆகிய நிறுவனங்கள் இணைந்து துவக்குகின்றன.

இந்த இணைய தங்க வர்த்தம் அடுத்த மாதத்தில் இருந்து செயல்பட துவங்கும்.

இதனை துவக்கி வைத்து ரிலையன்ஸ் மணி நிறுவனத்தின் இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சுதிப் பந்தோபாதியா மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்த இணையம் மூலம் தங்கம் வர்த்தகம் துவங்குவதால் லண்டன் உலோக சந்தையின் விலையை பொறுத்து, இந்தியாவிலும் விலை இருக்காது. இதற்கு பதிலாக உள்நாட்டில் எல்லா பகுதிகளிலும் தங்கத்திற்கு ஒரே விலை இருக்கும்.

தற்போது லண்டன் உலோக சந்தையில் விலை நிர்ணயத்தை பொறுத்து, இங்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் வெளிப்படையான தன்மை இல்லை. தரமும் ஒரே மாதிரியாக இல்லை. இதனால் நகை வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் அவர்கள் செலுத்தும் பணத்திற்கு உரிய மதிப்பிலான தங்கம் கிடைப்பதில்லை.

நாங்கள் தொடங்க உள்ள இணைய வாயிலான தங்க வர்த்தகத்தால், நாங்கள் விலையை நிர்ணயிப்பதுடன், நாடு முழுவதும் உள்ள தங்க, வெள்ளி சந்தைக்கு பெரிய அளவிலான சேவை வழங்கப் போகின்றோம்.

இந்த புதிய நிறுவனத்தில் மும்பை பங்குச் சந்தை வசம் 26 விழுக்காடு பங்கு இருக்கும். தேசிய பல்பொருள் முன்பேர வர்த்தக சந்தை தேவையான தொழில் நுட்பத்தையும், உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் வர்த்தக உதவிகளையும் வழங்கும். மும்பை பில்லியன் சங்கம் மற்ற நாடுகளில் தங்க விலை நிர்ணயிப்பு வழிமுறையை பின்பற்றி விலை நிர்ணயிப்பதற்கான உதவிகளை செய்யும். இதன் விலை நிர்ணயிப்பதை ஒரு குழு மேற்பார்வையிடும்.

இதற்கு தகவல் தொழில் நுட்ப நிபுணர்கள் தேவையான தொழில் நுட்ப உதவிகளை வழங்குவார்கள். நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரிலையன்ஸ் மணி மையங்களில் சில்லரை முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கலாம். இத்துடன் புதிய நிறுவனம் தர முத்திரை பதிக்கும் ஹால் மார்க் மையங்களையும் அமைக்கும். லண்டன் சந்தையில் காலையிலும் மாலையிலும் விலை நிர்ணயிக்கப்படுவது போல், இங்கும் விலை நிர்ணயிக்கப்படும்.

இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள நகை வர்த்தகர்கள் அல்லாத மற்றவர்கள் 1 கிலோ தங்கமும், 30 கிலோ வெள்ளியும் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதே போலே மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அல்லாத மற்றவர்கள் 100 கிராம் தங்கம், 30 கிலோ வெள்ளி வாங்க அனுமதிக்கபடுவார்கள்.

பொதுமக்கள் தங்க மற்றும் வெள்ளி நாணயங்களையும், விக்கிரங்கள், பூஜை பொருட்கள் போன்றவைகளையும், மற்ற நாகரிகமான பொருட்களையும் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்