அவுட்சோர்ஸிங் மீதான தடையால் பாதிப்பில்லை - நேஸ்காம்

அமெரிக்க மாகாணங்கள் அரசு சம்பந்தமான பணிகளை அவுட்சோர்ஸிங் செய்வதற்கு விதித்துள்ள தடையால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கான தேசியக் கழகம் (நேஸ்காம்) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 40 அமெரிக்க மாகாணங்களில், அரசுப் பணிகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதைத் தடை செய்யும் 112 ஆன்ட்டி அவுட்சோர்ஸிங் சட்ட முன்வடிவுகள் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், அவுட்சோர்ஸிங் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பணிகளின் மொத்த மதிப்பில் அமெரிக்க அரசு ஒப்பந்தங்களின் பங்கு இரண்டு சதவிகிதம் மட்டுமே என்பதால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்று நேஸ்காம் துணை தலைவர் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.

இதுவரை 112 ஆன்ட்டி அவுட்சோர்ஸிங் சட்ட முன்வடிவுகள் இயற்றப்பட்டிருந்தாலும் அவற்றுள் 5 மட்டுமே சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பாதுகாப்பு, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிப்பு, உலக அளவிலான போட்டி, உற்பத்தி அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த அவுட்சோர்ஸிங் தடை தவிர்க்க இயலாததாகி விட்டதாக நியூ ஜெர்ஸி ஆளுனர் ஜிம் மெக்ரீவி தெரிவித்துள்ளார்.

இந்தத் தடைகள் இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அரசு ஒப்பந்தங்களை வெளி நாடுகளுக்கு அளிக்கக் கூடாது, வெளி நாடுகளிலிருந்து இயங்கும் தகவல் மையங்களைச் (கால் செண்டர்ஸ்) சார்ந்திருப்பதை தவிர்த்தல் என்ற நோக்கிலேயே இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், அமெரிக்க தனியார் நிறுவனங்கள் இத்தகைய தடை விதிப்பில் ஆர்வம் காட்டாததால் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்