ஐபிஎல்: டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்

திங்கள், 4 மே 2015 (08:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட்டின் 36 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்ததி ராஜஸ்தான் அணி 6 ஆவது வெற்றியை பெற்றது.


 

 
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த 36 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சுடன் மோதியது.
 
டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டுமினி ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ஷேன் வாட்சன் 21 ரன்களில் மேத்யூசின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
 
பின்னர் ரஹானேவும், கருண் நாயரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பீல்டிங் ராஜஸ்தானுக்கு சாதகமாக அமைந்தன. ரஹானேவுக்கு இரண்டு முறையும், கருண் நாயருக்கு ஒரு முறையும் கேட்ச்சை கோட்டை விட்டனர்.
 
இந்த ஜோடி 2 ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் திரட்டியது. கருண் நாயர் 61 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இந்த சீசனில் 4 ஆவது அரைசதத்தை பதிவு செய்த ரஹானே 91 ரன்களுடன் (54 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார்.
 
20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் அவர்கள் 75 ரன்களை சேகரித்தனர்.
 
அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை நேற்று முன்தினம் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் (378 ரன்) கைப்பற்றினார். தற்போது ரஹானேவின் மொத்த ரன் எண்ணிக்கை 430 ரன்களாகி விட்டதால் தொப்பி மீண்டும் அவர் வசம் வந்து சேர்ந்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், இளம் புயல்கள் மயங்க் அகர்வாலும் (11 ரன்), ஸ்ரேயாஸ் அய்யரும் (9 ரன்) கிளீன் போல்டாகி திரும்பினர்.
 
கேப்டன் டுமினி (56 ரன், 3 பவுண்டரி, 3 சிக்சர்) தவிர மற்றவர்களின் ஆட்டம் பெரிய அளவில் இல்லை. யுவராஜ்சிங்கும் (22 ரன், 18 பந்து, 4 பவுண்டரி) ஏமாற்றினார். 20 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து, 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தானின் புள்ளி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. 
 
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இது 500 ஆவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்