பெரியாறு அணை பலமாகவே உள்ளது

செவ்வாய், 19 ஜூலை 2011 (13:00 IST)
FILE
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை உச்சக் கட்டத்தில் இருந்த 2005 முதல் 2007ஆம் ஆண்டுகளில் தமிழக பொதுப் பணித் துறையின் தலைமைப் பொறியாளராக இருந்தவர் ஆர்.வி.எஸ். விஜயகுமார். அந்த காலகட்டத்தில்தான் அணையின் பலத்தை ‘சோதிக்க’ தமிழக அரசுக்கு அறிவிக்காமலேயே மத்திய பாதுகாப்பு அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்திய கேரள அரசு, கடற்படையினரை அங்கு இறக்கியது. மிக நெருக்கடியான அந்த சூழலை மிகுந்த சாதுரியத்துடன் சமாளித்து, கேரள அரசின் முயற்சியை முறியடித்தவர் விஜயகுமார்.

“முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்…” என்று மீண்டும் பழைய பொய்யை நிசமாக்கும் ஒப்பாரியை தொடங்கியுள்ள கேரள அரசு, புதிய அணையை கட்டியே தீருவோம் என்று ஆளுநர் உரையில் கூறியுள்ளது. கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள உம்மண் சாண்டியும் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் “புதிய அணையை கட்டியே தீருவோம்” என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில், இப்பிரச்சனை குறித்து பொறியாளர் ஆர்.வி.எஸ். விஜயகுமாரை தமிழ்.வெப்துனியா.காம் ஆசிரியர் கா.அய்யநாதன் பேட்டி கண்டார்.

தமிழ்.வெப்துனியா.காம்: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரள முதலவராகப் பொறுப்பேற்றுள்ள உம்மண் சாண்டி கூறியுள்ளார். ஆனால், சில வாரங்களுக்கு முன்னர்தான் முல்லைப் பெரியாறு அணையை மத்திய நீர்வளத் துறையின் நிபுணர் குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவு ஏதும் கூற முடியுமா?

பொறியாளர் விஜயகுமார்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்த் தேக்கப் பக்கத்தில் அணையின் பலத்தை உறுதி செய்வதற்காக நீருக்குள் சென்று படமெடுக்கும் புகைப்படக் கருவியை பயன்படுத்தி இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின் முடிவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை கேரள அரசு அறிந்துகொண்டதாகத் தெரிகிறது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அந்த ஆய்வு தொடர்பான அறிக்கை பற்றிப் பேசாமல், புதிய அணை பற்றிப் பேசி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் இதேபோன்று 2006ஆம் ஆண்டிலும் சோதனை நடத்த கேரள அரசு முயன்றது. அப்போது இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி வீரர்களையும், புகைப்படக் கருவிகளையும் கொண்டு ஆராய முற்பட்டது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணையை தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தாமலேயே சோதனை செய்ய நடந்த இம்முயற்சியை முன்னாள் நள்ளிரவுதான் தெரிந்துகொண்டோம்.

உடனே அப்போது முல்லைப் பெரியாறு அணைப் பகுதியின் கண்காணிப்பாளராக இருந்த செயற் பொறியாளருக்குத் தகவல் அளித்தேன். காலையில் வந்திருங்கிய கடற்படையினர், அணைக்குள் மூழ்கி தேர்வு செய்வதற்கு முன்னர், அணையின் சுவற்றில் ஏற்படும் கசிவுகளை காண வேண்டும் என்றனர். அணையில் 104 அடிக்கு மேல் தேங்கும் நீரை மட்டுமே பயன்படுத்த முடியுமென்பதால், அந்த அளவிற்கு கீழ் நீரும் சகதியுமாகவே இருக்கும். எனவே அந்தப் பகுதியில் மூழ்கி ஆய்வு செய்வதென்பது சற்று ஆபத்தான விடயம் என்பதால், அதன் வெளிப்பகுதியில் கசிவு ஏற்படும் இடத்தைக் கண்டறிந்து ஆய்வு செய்ய அவர்கள் முயன்றுள்ளனர்.

கசிவுகளை கண்டறிய இரண்டு வழிகள் அணையின் வெளிப்பக்கத்தில் உள்ளன. ஒன்று 10 அடி உயரத்திலும், மற்றொன்று 45 உயரத்திலும் இருக்கிறது. அந்த வழிகளை இரும்பு கதவுகள் போட்டு பூட்டி வைத்திருந்தோம். அதனை திறந்துகாட்டுமாறு கடற்படையினர் கேட்டுள்ளனர். அனுமதியின்றி வந்துள்ள கடற்படையினரை அனுமதிக்க முடியாது என்று செயற் பொறியாளர் கூறிவிட்டார். இதற்கிடையே இந்த விடயத்தை தமிழக முதல்வரின் காதுகளுக்கு கொண்டு சென்றோம். அவர் மத்திய அரசிடம் இதுபற்றி விசாரிக்க, அங்கிருந்து வந்த உத்தரவை அடுத்து ஆய்வு செய்ய வந்த கடற்படையினர் வெளியேறினர்.

இப்போது அப்படிப்பட்ட ஆய்வுதான் - அதாவது அணையின் கீழப் பகுதியை புகைப்படக் கருவி மூலம் படமெடுத்து ஆய்வு செய்து, அப்பகுதியில் பெரிய விரிசல் அல்லது பிளவு ஏதும் உள்ளதா என்று கண்டறியவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்று தெரிகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தங்களுக்கு சாதகாக வராது என்பதால்தான் புதிய அணையை கட்டுவோம் என்று கேரள அரசு கூறிவருகிறது.

தமிழ்.வெப்துனியா.காம்: பெரியாறு அணை 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, எனவே அதனால் அது பலவீனமாகவுள்ளது, அது உடைந்தால் பெரியாறு ஆற்றுப் படுகையில் உள்ள 5 மாவட்டங்களில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்று கேரள அரசும், அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனரே?

பொறியாளர் விஜயகுமார்: தற்போது இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள மற்ற எந்த அணையையும் போன்று முல்லைப் பெரியாறு அணையும் பலமாகவே உள்ளது. 1979ஆம் ஆண்டிலும், அதன் பிறகு 1999ஆம் ஆண்டிலும், பிறகு 2004ஆம் ஆண்டிலும் மத்திய அரசின் நீர் வளத் துறையின் நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அணை பலமாக உள்ளதென அறிக்கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின அடிப்படையில்தான் 2006ஆம் ஆண்டில் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு முதற்கட்டமாக உயர்த்தலாம் என்றும், போகப் போக நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே ஒரு முறை கூட பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று யாராலும் சொல்லப்படவில்லை. 1979இல் அணையை ஆய்வு செய்த கே.சி.தாமஸ், கேரள அரசின் அச்சத்தை போக்குவகையில் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதனை ஏற்று, அணை மிக நவீனமான வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் நாங்கள் வெளியிட்ட புத்தகத்திலும், அதோடு வெளியிட்ட குறுந்தகட்டிலும் விரிவாகக் கூறியுள்ளோம். எனவே அணை பலவீனமாக இருக்கிறது என்று தொடர்ந்து கூறுவது அடிப்படையற்றது, அரசியல் வாதம்.

தமிழ்.வெப்துனியா.காம்: புதிய அணை கட்டினாலும், தமிழ்நாட்டிற்குரிய நீரை அளிப்போம் என்று கேரள முதல்வர் உம்மண் சாண்டி கூறியுள்ளாரே. அது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் கூறியுள்ளாரே?

FILE
பொறியாளர் விஜயகுமார்: புதிய அணையை எங்கே கட்டப்போகிறார்கள்? பெரியார் அணையில் இருந்து 1400 அடி தூரத்தில் என்று கூறியுள்ளார்கள். அந்த இடம் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தை விட 50 அடி கீழே உள்ளது. அங்கு 140 அடி உயரத்திற்கு புதிய அணை கட்டப்போவதாகக் கூறுகிறார்கள்.

இப்போது பெரியாறு அணையின் உயரம் 156 அடி. அதில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம். ஆனால், அணையின் நீர்மட்டம் 104 அடிக்கு மேல் தேங்கும் தண்ணீரை மட்டுமே தமிழகத்தால் பயன்படுத்த முடியும். அதாவது 110 அடிக்கு நீர்மட்டம் உயரும்போதுதான் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வர முடியும். அப்படியானால், 1000 அடி தூரத்தில் 50 அடிக்கு கீழே கட்டப்படும் புதிய அணையில் முழு அளவிற்குத் தண்ணீர் தேக்கினாலும், அது தற்போதுள்ள அணையின் குறைந்த பட்ச நீர் தேக்க அளவான 104 அடிக்கு இணையான உயரத்திற்கு வராது. அதற்கு அணையின் அளவு குறைந்தபட்சம் 104 +50 = 154 அடிக்கு தண்ணீர் தேக்குமாறு இருக்க வேண்டும். ஆனால் கேரள அரசு 140 அடி என்றுதான் கூறுகிறது. அதில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வர முடியாது என்பதே உண்மை. எனவே இப்போது இருக்கும் அணைக்கு இணையாக புததாக ஒரு அணை கட்டப்பட வேண்டும் எனில் அது 190 அடி உயரத்திற்கு இருக்க வேண்டும். அவ்வாறு கேரள அரசு சொல்லவில்லை. எனவே, புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தருவோம் என்று கேரளா கூறுவதில் உண்மையேதுமில்லை.

அதுமட்டுமல்ல, முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடம் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் இடம் என்றும், எனவே அணை உடையும் சாத்தியம் அதிகம் உள்ளதென்று கேரள அரசு பிரச்சாரம் செய்து வந்தது. இப்போது அதே இடத்தில், 1000 அடி தள்ளி புதிய அணை கட்டுவோம் என்கிறது! இந்த விடயத்தை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூற வேண்டும்.

இதேபோல் கேரள அரசு கூறும் மற்றொரு விடயத்தையும் பார்ப்போம். பெரியாறு அணை உடைந்தால் அந்த அணையில் இருந்து வெளியேறும் நீரால், பெரியாறு நதிப் போக்கில் உள்ள 5 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்ட கிராஃபிக்ஸ் படத்தில் காட்டியிருந்தனர். இவர்கள் கூறுவதுபோல், பெரியாறு அணை உடைந்தாலும், அந்த நீர் கீழ் நோக்கி ஓடி, 45 கி.மீ. தூரத்திலுள்ள இடுக்கி அணையில்தான் சென்று சேரும். இடுக்கி அணையின் கொள்ளளவு பெரியார் அணையின் கொள்ளளவைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம்! எனவே கேரள அரசு கூறும் விடயங்கள் எல்லாமே உண்மைக்கு அப்பாற்பட்டவை.

தமிழ்.வெப்துனியா.காம்: கேரள முதல்வர் உம்மண் சாண்டி பெரியாறு அணைதான் பிரச்சனை என்கிறார், ஆனால் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ஹரீஸ் சால்வே, அணையல்ல பிரச்சனை, தண்ணீர்தான் பிரச்சனை என்று கூறியுள்ளாரே?

பொறியாளர் விஜயகுமார்: தண்ணீர் தேவைக்குத்தானே அணை கட்டுகிறோம்? ஆனால் ஆரம்பம் முதலே இவ்வாறு கேரள அரசு சார்பில் கூறப்படுகிறது. அணையின் தண்ணீர் மீது தமிழ்நாட்டிற்கு எந்த உரிமையும் இல்லை என்று பேசி வருகிறது. இது உண்மையல்ல. பெரியாறு அணையில் தேங்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? அதன் நீர்ப் பிடிப்புப் பகுதியின் 40 விழுக்காட்டு நிலம் தமிழ்நாட்டின் எல்லைக்குட்ப்பட்ட பகுதியில்தான் அமைந்துள்ளது. இதனை பொறியாளர் கோமதி நாயகம் (பழ.நெடுமாறன் அவர்களின் தம்பி) ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். அப்படியானால், பெரியாறு அணைக்கு வரும் நீரில் 40 விழுக்காடு தமிழ்நாட்டின் உரிமைக்குட்பட்டதாகும்.

பெரியாறு அணையில் ஆண்டிற்கு வரும் தண்ணீரின் அளவு 200 டிஎம்.சி.க்கும் அதிகம் என்று அளவிடப்பட்டுள்ளது. அதில் 40 விழுக்காடு நமது உரிமை என்றாலும் சற்றேறக்குறைய 80 முதல் 90 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திட வேண்டுமல்லவா? ஆனால் நாம் பெறுவது எவ்வளவு? நல்ல மழை பெய்தாலும் அதிகபடசமாக 20 டி.எம்.சி.தான் அதாவது கால் பங்கு கூட இல்லை என்பதே உண்மை. ஆக, அணைப் பிரச்சனை என்றாலும் சரி, தண்ணீர் பிரச்சனை என்றாலும் சரி, தமிழ்நாட்டின் உரிமையை கேரளத்தால் புறக்கணித்துவிட முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்