பிரித்தாளும் திட்டமும் வங்கப் பிரிவினையும் (1906 - 1911)

வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (18:13 IST)
1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியா முழுவதும் தங்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் அதிகரித்து வருவதைக் கண்ட பிரிட்டிஷ் இந்திய அரசு, தங்கள் காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்த காங்கிரஸை துவக்கியது. ஆனால், அது போதுமான பலனைத் தராதது மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இயக்கமாக பரிணாம வளர்ச்சி கண்ட நிலையில்தான் பிரித்தாளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் துவக்கினர். 
 
அதுவரை இந்திய அரசிற்கு எதிராக அரசியல் சமூகக் களங்களில் இணைந்து போராடி வந்த இந்து, முஸ்லிம் சமூகங்களைப் பிரித்து மோதவிட்டு அதில் அதிகார குளிர்காய திட்டமிட்டனர். இத்திட்டத்தின் முதல் வெளிப்பாடே வங்கப் பிரிவினையாகும். இன்றைய அஸ்ஸாம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களையும் சேர்ந்த மிகப் பெரிய மாகாணமான வங்கத்தை கிழக்கு, மேற்கு என்று பிரித்தனர். 
 
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி கிழக்கு வங்காளமாகவும், இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி மேற்கு வங்காளமாகவும் பிரிக்கப்பட்டது. வங்கப் பிரிவினை இந்திய விடுதலைப் போராட்டத்தை மத ரீதியாக பலவீனப்படுத்திவிடும் என்ற பிரிட்டிஷ் அரசின் திட்டம் தவிடுபொடியானது. வெள்ளையனின் சூழ்ச்சியை மக்களுக்கு தெளிவாக விளக்கிய அரவிந்த கோஷ் உள்ளிட்டத் தலைவர்கள் சுதந்திர உணர்ச்சியை ஆழமாக வேரூன்றச் செய்தனர். 
 
வந்தேமாதம் எனும் இதழின் வாயிலாக இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயத்தம் செய்தார் அரவிந்த கோஷ். பிரிட்டிஷாரும் சளைக்கவில்லை. முஸ்லிம் தலைவர்களைப் பிடித்து, அவர்களின் உரிமை பறிபோய்விடும் என்று கூறி மூளைச் சலவை செய்தனர். விளைவு : 1906 ஆம் ஆண்டு முஸ்லிம் லீக் பிறந்தது. 
 
வங்கப் பிரிவினைக்கு கடைபிடித்த அதே பிரித்தாளும் தந்திரத்தையே பின்னாளில் ஜின்னாவைப் பயன்படுத்தி இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கு அடித்தளமிட்டது பிரிட்டிஷ் இந்திய அரசு. 
 
வங்கப் பிரிவினை ரத்தானது (1911)
 
வங்கப் பிரிவினைக்கு எதிராக தொடர்ந்து நடந்த வெகுஜன கிளர்ச்சியினால் அப்பிரிவினையை 1911 ஆம் ஆண்டு வெள்ளைய அரசு ரத்து செய்தது. பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தேசக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் முக்கியப் பங்கு வகித்தார். வந்தேமாதம் பாடலைப் போலவே இவரது பாடல்களும், எழுத்துக்களும் இளைஞர்களிடையே சுதந்திர உணர்ச்சியைத் தூண்டியது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்