காஷ்மீர் பிரச்சனை: மகாத்மா காந்தி ஆற்றிய உரை!

வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (17:49 IST)
போர் அபாயம் இருப்பதாகவே இன்று பரவலாகப் பேசப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் என்றே பலரும் அஞ்சுகின்றனர். இது நடந்தால் அது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பேராபத்து ஏற்படுத்தும். 
சண்டை ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டால், போரிடுவதைத் தவிர்த்து பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளதால் இப்பிரச்சனை குறித்து இந்தியா ஐ.நா.வுக்கு கடிதம் எழுத வேண்டும்.
 
அந்தப் பிரச்சனை எவ்வளவு சொற்பமானதாக காணப்பட்டாலும் அது இரு நாடுகளுக்கிடையே போரை ஏற்படுத்தும். எனவே ஒரு நீண்ட மனுவை தந்தியின் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 
 
பாகிஸ்தான் தலைவர்கள் ஜஃபருல்லா கான், லியாகத் அலி கான் இப்பிரச்சனை தொடர்பாக நீண்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளவை எனக்கு ஏற்புடையவையாக தோன்றவில்லை. 
 
காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு ஐ.நா.வை அணுகுவதை தாங்கள் அனுமதிப்பீர்களா என்று என்னிடம் நீங்கள் கேட்டால், இதற்கு அனுமதிப்பேன், அனுமதிக்க மாட்டேன் என்றுதான் பதிலளிப்பேன். 
 
 
அனுமதிப்பேன் என்று கூறுவது ஏனென்றால், இப்பிரச்சனையில் மத்திய அரசால் வேறு என்ன செய்ய முடியும் என்பதால்தான். அவர்கள் செய்வது சரியான செயல் என்று அவர்களே சமாதானப்பட்டுக் கொள்கின்றனர். 
 
காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அது பாகிஸ்தானின் மறைமுக தூண்டுதலால்தான் நடக்கிறது என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால் இந்த மறுப்பினால் பிரச்சனை முடிவுக்கு வராது. 
 
இப்பிரச்சனையில் மத்திய அரசின் நடவடிக்கையை ஒரு சில காலகட்டங்களில் காஷ்மீர் மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பாகிஸ்தானால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அம்மாநில தலைவர் ஷேக் அப்துல்லா உடனடியாக மத்திய அரசின் உதவியைக் கோர நேரிடும். அவர் கோரும் உதவியையும் மத்திய அரசு அளித்தாக வேண்டும். 
 
அதேவேளையில் இருதரப்பிலும் பேச்சு நடத்துவதுடன், காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்க மறுத்தால் போர் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும். 
 
போரைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி சரியா? தவறா? என்று கடவுளுக்கே தெரியும். 
 
 
இப்பிரச்சனையில் பாகிஸ்தானின் நிலை எதுவாக இருந்தாலும், பாகிஸ்தான் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அழைத்துப் பேச்சு நடத்தி தீர்வு காண்பதே எனது முடிவாக இருக்கும். காஷ்மீர் பிரச்சனையில் நட்புறவான முடிவையே தாங்கள் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் கூறி வந்தாலும், அதற்கான சூழலை அவர்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. 
 
எனவே, பாகிஸ்தான் தலைவர்களுக்கு நான் விடுக்கும் பணிவான கோரிக்கை என்னவென்றால், எனது விருப்பத்தை மீறி நாம் தற்போது இரு வேறு நாடுகளாக பிரிந்து விட்டாலும் எதிர்காலத்தில் ஒற்றுமையாக, அமைதியான நட்பு நாடுகளாக திகழ வேண்டுமென்றால் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். 
 
விவாதத்தின் நலனுக்காக வேண்டுமென்றால் அனைத்து இந்தியர்களும் தவறானவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் மதத்தின் பெயரால் இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் தங்களை பரிசுத்தமானவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை. பாகிஸ்தானில் நடைபெறும் அக்கிரமச் செயல்களில் முஸ்லிம்கள் யாரும் ஈடுபடவில்லை என்று அவர்களாலேயே கூறமுடியவில்லை.
 
எனவே அவர்களுக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், இந்தியாவுடன் நட்புறவான புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, அமைதியான நட்பு நாடாக இருப்பதே பாகிஸ்தானின் கடமையாகும். 
 
தவறு இரு தரப்பிலும் உள்ளது. இதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் இதனைக் காரணம் காட்டி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்து பிடிவாத நிலையைக் கடைபிடித்தால், அது இரு நாடுகளிடையே போரை ஏற்படுத்தி நம்மை அழிப்பதுடன் ஒட்டுமொத்த துணைக் கண்டமும் மூன்றாவது சக்தியின் ஆளுமைக்கு உட்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். அதுதான் கற்பனைக்கு எட்டாத மிகப் பெரிய தவறாகிவிடும். அது போன்ற நிலையை நினைத்துப் பார்க்கவே என் உடல் நடுங்குகிறது. 
 
எனவே கடவுளை சாட்சியாகக் கொண்டு இரு நாடுகளும் ஒரு தீர்வை காண முன்வர வேண்டும். இப்பிரச்சனை தற்போது ஐ.நா. முன்னிலையில் தீர்வுக்காக காத்திருக்கிறது. அதனை அங்கிருந்து திரும்பப் பெறுவதும் இயலாத காரியம். 
 
ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அதனை ஐ.நா வரவேற்று நடைமுறைப்படுத்தும். ஒருபோதும் அதனை எதிர்க்காது. 
 
 
இரு நாடுகளும் பரஸ்பரம் பேச்சுநடத்தி தீர்வு காண முன்வர வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தி வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 
 
எனவே இரு நாட்டு மக்களும் நட்புறவுடன் ஒன்றாக வாழ வேண்டும் அல்லது இரு தரப்பினரும் இறுதிவரை போரிட வேண்டும் என்று கடவுளிடம் பிராத்திக்க வேண்டும். இது முட்டாள்தனமான முடிவாக இருந்தாலும் இதன் மூலமே நாம் பரிசுத்தம் அடைய முடியும். 
 
டெல்லியைப் பற்றி சில வார்த்தைகள் பேசி விடுகிறேன். பிரிஜ்கிஷனில் முகாமில் நேற்று மாலை நடந்த சம்பவங்கள் குறித்து அறிந்தேன். அங்கு மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அந்த முகாமுக்கு வெகு அருகில் சில முஸ்லிம் குடியிருப்புகளும் இருந்தன.
 
முகாமில் தங்கியிருந்த 400 அல்லது 500 பேர், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் சில ஆண்கள் அந்தக் குடியிருப்புகளில் சென்று தங்கிக் கொள்ள வலியுறுத்தப்பட்டனர். அவர்கள் எந்தவித கலவரங்களிலும் ஈடுபடமாட்டார்கள் என்று என்னிடம் கூறியிருந்தனர்.
அந்த குடியிருப்புகளில் பல காலியாக இருந்தாலும், சிலவற்றில் அதன் உரிமையாளர்கள் வசித்தனர். 
 
முகாமில் இருந்து வெளியேறிய மக்கள், உரிமையாளர்கள் தங்கியிருந்த வீடுகளையும் ஆக்கிரமிக்க முயன்றதால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. எனினும், அருகே இருந்த காவல்துறையினர் தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்து, இரவு 9 மணியளவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
கலவரம் ஏற்படுவதைத் தடுக்க காவலர்கள் கண்ணீர்ப்புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர். கண்ணீர்ப்புகை குண்டுகள் உயிரிழப்பை ஏற்படுத்தாது என்றாலும், அது அதிக வலியை ஏற்படுத்தும். இன்றும் அங்கு சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது மிகப்பெரிய அவமானகரமான சம்பவம் என்றுதான் கூறுவேன். இவ்வளவு கடும் துயரத்தில் இருக்கும் போது அடுத்தவர்களின் வீடுகளை ஆக்கிரமிக்கக் கூடாது என்று அகதிகளுக்கு தெரியாதா? அவர்களுக்கு தேவையான வசதிகளையும், இதர ஏற்பாடுகளையும் அரசுதான் செய்து தர வேண்டும் என்பதையும் அவர்கள் அறியவில்லையா?
 
அரசையும், காவல்துறையினரையும் புறக்கணித்து விட்டு அடுத்தவர்களின் வீடுகளை அகதிகள் ஆக்கிரமிக்க துவங்கினால் இந்த அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் தூதர்கள் வந்து செல்லும் நாட்டின் தலைநகரமான டெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றதுதான் மிகவும் சோகமயமான விஷயம்.
 
தங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதற்காக அகதிகள் தரப்பில் பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்தியுள்ளது மனிதாபிமானமற்ற செயல். இது எதைப் போன்றது என்றால், படையெடுத்து வரும் முஸ்லிம் அரசர்கள், தங்கள் படையில் பசு மாடுகளை அழைத்து வந்தால், ஹிந்து மக்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று எண்ணுவதற்கு சமமானது. இது நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.
 
காவல்துறையினர் தடியடி நடத்தும் போது அவர்களிடம் இருந்து தப்ப, பெண்களையும், குழந்தைகளையும் அகதிகள் முன்னிறுத்தியுள்ளது மிகக் கொடுமையான விஷயம். இது பெண்களுக்கு எதிரான கொடுமையாகும். இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்பதே அகதிகள், பெண்கள், குழந்தைகளுக்கு என்னுடைய பணிவான கோரிக்கையாகும். 
 
அவரவர்கள் தங்கள் பகுதியில் குடியேறட்டும். அப்படி இல்லையென்றால், இந்தியா-பாகிஸ்தான் போருக்கு முன்பாகவே, நமக்குள்ளேயே நாம் அடித்துக் கொண்டு இறப்போம். டெல்லியின் நிலையைக் கண்டு உலகமே கைகொட்டி சிரிக்கும். இந்தியாவை சுதந்திர நாடாக திகழச் செய்ய வேண்டுமென்றால், தற்போது நடந்து வரும் கலவரங்களை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்