தெலுங்கு வருடப்பிறப்பு என்று அழைக்கப்படும் யுகாதி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
யுகாதி பண்டிகையையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடாசலபதி கோயிலில், காலை 9 மணிக்கு வெங்கடாசலபதிக்கு அஷ்டதனபாத பத்ம பூஜை (தங்க புஷ்ப அர்ச்சனை). உற்சவருக்கு யுகாதி ஆஸ்தானம், அதைத்தொடர்ந்து பஞ்சாங்கம் படித்தல் இடம்பெறும். சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று தகவல் மைய நிர்வகி அனந்தகுமார் ரெட்டி தெரிவித்தார்.
சென்னை ஆதியப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஸ்ரீகன்யகாபரமேஸ்வரி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். மாலை 4 மணியில் இருந்து 6.30 மணி வரையில் கடலூர் வீரமணி குழுவினரின் பஜனைப்பாடல்களும், 7 மணிக்கு பஞ்சாங்கம் படித்தலும் இடம்பெறும்.
ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் மக்கள் இன்று தங்களது புத்தாண்டு பிறப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.
தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே இன்று ஆந்திர, கர்நாடக மக்களும் தங்களது புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு, எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.
இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவர்.