காலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

செவ்வாய், 21 டிசம்பர் 2021 (23:55 IST)
ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் ஆற்றல் காலை உணவிலிருந்தே கிடைக்கிறது. 'உடல் எடையைக் குறைக்கிறேன்' என்று பலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். 'நேரமில்லை' என்கிறார்கள் சிலர்.
 
காலை உணவைத் தவிர்த்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோருக்கு ரத்த அழுத்தம் இயல்பைவிட அதிகமாக  இருந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 'காலையில் தவறாமல் சாப்பிடுகிறீர்களா' என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். 
 
காலை உணவு சாப்பிடுபவர்களைவிட, உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 27 சதவிகிதம் அதிகரிப்பதாக ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
காலை உணவைத் தவிர்ப்பதால், குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். காலையில் சாப்பிடாமல் இருக்கும்போது, குளுக்கோஸ்-இன்சுலின் சார்ந்த செயல்பாடுகள் குறையும். அதன் பிறகு மதிய  உணவின் மூலம் கிடைத்த அதிக குளுக்கோஸை ஈடுகட்ட, அதிகமாக இன்சுலின் சுரந்து, தொடர்ந்து மாற்றங்கள் நிகழும். சில மாதங்கள்  கழித்து ’இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்’ ஏற்பட்டு, சர்க்கரை நோயாளியாக நாமும் மாறிவிடுவோம்.
 
உடல் எடையைக் குறைப்பதற்காக காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.  இதன்மூலம் உடல் எடை உயருமே தவிர, குறைவது கடினம்.
 
உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் போகப் போக  வெளியாகத் தொடங்கும். 
 
உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய க்ரெலின் ஹார்மோன் மற்றும் 'சாப்பிட்டது போதும்' என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய  லெப்டின் ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும். லெப்டின் ஹார்மோனின் அளவு குறைந்து, கெர்லின் ஹார்மோனின்  அளவு அதிகரிக்கும்போது, பசி உணர்வு அவ்வளவு சீக்கிரம் அடங்காது.
 
குளுக்கோஸிலிருந்து கிடைக்கும் ஆற்றலை அதிகம் எதிர்பார்ப்பது உடலின் தலைமைச் செயலகமான மூளை! சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும்  குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்