ஸ்டார் வார்ஸ் - ஜுராஸிக் வேர்ல்டின் வசூலை முறியடிக்கப் போகும் படம்

ஞாயிறு, 28 ஜூன் 2015 (12:56 IST)
யூனிவர்சல் ஸ்டுடியோவின் ஜுராஸிக் வேர்ல்ட் 13 தினங்களில் ஒரு பில்லியன் டாலர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.


 

 
யுஎஸ்ஸில், த அவேஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் வசூலையும் அது முறியடித்துள்ளது.
 
ப்யூரியஸ் 7, ஜுராஸிக் வேர்ல்ட் என இரு படங்கள் அடுத்தடுத்து ஒரு பில்லியனை கடந்து யூனிவர்சல் பிக்சர்ஸை முதலிடத்தில் வைத்துள்ளது. இந்த வருட யுஎஸ் வசூலில் 23.96 சதவீதத்தை கைப்பற்றி இந்நிறுவனம் முதலிடத்திலும், 18.97 சதவீதத்துடன் டிஸ்னி இரண்டாவது இடத்திலும், 18.90 சதவீதத்துடன் வார்னர் பிரதர்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 
ஜுராஸிக் வேர்ல்டின் வசூலை இந்த வருடம் வெளியாகும் ஏதேனும் படம் முறியடிக்குமா என்பதே இப்போதைய கேள்வி. ஆம், என்று பெரும்பாலான நிபுணர்கள் இதற்கு பதிலளித்துள்ளனர்.
 
டிசம்பர் மாதம் டிஸ்னியின் ஸ்டார் வார்ஸ் - த ஃபோர்ஸ் அவெக்கன்ஸ் வெளியாகிறது. ஸ்டார் வார் சீரிஸுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
 
மேலும், இது யுஎஸ்ஸின் விடுமுறை காலமான டிசம்பரில் வெளியாகிறது. இந்த மாதத்தில் வெளியான இரு படங்கள்தான் உலக அளவில் வசூலில் முதலிரு இடங்களில் உள்ளன. அவை, அவதார் மற்றும் டைட்டானிக்.
 
இந்த கணக்குகளை கூட்டிக் கழித்து, ஸ்டார் வார்ஸ் இரண்டு பில்லியனை கடந்து சாதனை படைக்கும் என கணித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்