சூப்பர்ஹீரோ படங்களிலேயே ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்துக்கு தனி இடம் உண்டு. சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படமும் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்துக்கான உரிமைகளை வைத்திருக்கும் சோனி நிறுவனத்திற்கும், மார்வெல் ஸ்டுடியோஸுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை சரியாக முடியாததால் ஸ்பைடர்மேன் திரைப்பட உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இனி மார்வெல் சூப்பர்ஹீராக்களில் ஸ்பைடர்மேன் வரமாட்டார் என கூறப்படுகிறது.
இந்த செய்தி உலகமெங்கும் உள்ள ஸ்பைடர்மேன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைடர்மேனுக்காக சமூக வலைதளங்களில் களமிறங்கிய அவர்கள் சோனி நிறுவனத்தை திட்டி பதிவுகள் இட்டு வருகின்றனர். மேலும் ஸ்பைடர்மேன் வேண்டும் என வலியுறுத்தும் வகையில் #SaveSpiderMan என்ற ஹேஷ்டேகையும் பிரபலப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவிலும் ஸ்பைடர்மேனுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் இந்த பிரச்சினை இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்த ஹேஷ்டேகுகளை பின்னுக்கு தள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ஹேஷ்டாகுகளை பெற்றிருக்கிறது ஸ்பைடர்மேன் பிரச்சினை. இதுகுறித்த சரியான முடிவை சோனி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் எடுக்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கையாக உள்ளது.