ஹாலிவுட்டில் ஒரு படம் ரிலீஸாக இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில் இப்போதே அந்த படத்திற்காக டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்கி அதுவும் முழுவதுமாக விற்றுத் தீர்ந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஒடிசி திரைப்படம் தான் அது. ஹாலிவுட் தொடங்கி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திரைப்படங்கள், திரை இயக்குனர்கள் வெகு சொற்பமே! ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், ஜேம்ஸ் கேமரூன் என உலகம் போற்றும் ஹாலிவுட் இயக்குனர் வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பவர்தான் கிறிஸ்டோபர் நோலன்.
இவரது மூளையை குழப்பும் விதமாக கதையம்சம் கொண்ட படங்களான இண்டெஸ்டெல்லார், இன்செப்ஷன், டெனட் போன்ற படங்கள் ஒருவகை என்றால், டன்கிர்க், ஒபென்ஹெய்மர், ப்ரெஸ்டிஜ் உள்ளிட்டவை க்ளாசிக் ரகங்கள்.
தற்போது நோலன் பிரபல கிரேக்க இதிகாச காவியமான ஒடிஸியை படமாக்கி வருகிறார். இதற்காக இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் உண்மையாகவே புராண காலம் போல பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த படம் முழுவதும் ஐமேக்ஸ் பிலிம் கேமராவில் படமாக்கப்படுகிறது. மேலும் வழக்கபோல கிராபிக் வெறுப்பாளரான நோலன் இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுத்து வருகிறார்.
இவ்வாறு ஐமேக்ஸ் பிலிமில் எடுக்கப்பட்ட படங்களை நேரடியாக ஐமேக்ஸ் பிலிமாகவே திரையிடும் தியேட்டர்கள் உலகத்தில் மொத்தம் 15 திரையரங்குகள் மட்டுமே உள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று நியூயார்க்கில் உள்ள AMC Lincoln Square. இந்த Odyssey திரைப்படம் ஜூலை 16, 2026 (சரியாக ஒரு வருடம் கழித்து) வெளியாக உள்ளது.
ஆனால் அதற்கு லிங்கன் தியேட்டரில் இப்போதே டிக்கெட்டுகளை புக்கிங் ஓபன் செய்துள்ளனர். ஓபன் செய்த சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததுதான் தியேட்டர் நிர்வாகமே எதிர்பார்க்காத ஆச்சர்யம். இந்த செய்தி வேகமாக வைரலாகி வரும் நிலையில் நோலன் படம்னா சும்மாவா என்று மார் தட்டுகிறார்கள் நோலன் ரசிகர்கள்.
Edit by Prasanth.K