எய்ட்ஸால் இறந்த கொலைகாரன் வேடத்தில் சில்வஸ்டர் ஸ்டாலோன்

புதன், 9 ஜூலை 2014 (14:08 IST)
த எக்ஸ்பென்டபிள்ஸ் 3இல் நடித்த கையோடு அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன். படத்தின் பெயர் ஸ்கார்பா (Scarpa).  
 
க்ரகோரி ஸ்கார்பா நிழல் உலகில் பிரபலமான பெயர். நியூயார்க்கில் 1928இல் பிறந்த ஸ்கார்பா அப்போது அமெரிக்காவை ஆட்டிப் படைத்த ஐந்து க்ரைம் குடும்பங்களில் ஒன்றான கொலம்போ க்ரைம் ஃபேமிலியின் கீழ் செயல்பட்டார். பிறகு எஃப்பிஐ-யின் இன்ஃபார்மராக செயல்பட்டார். கடைசி காலத்தில் சிறையில் எய்ட்ஸால் மரணமடைந்தார்.
 
கொலம்போ ஃபேமிலியின் கீழ் பணிபுரிந்த போது குறைந்தபட்சம் ஐம்பது போரையாவது கொன்றிருப்பேன் என ஸ்கார்பா கூறியுள்ளார். இறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்புகூட அவர் மூன்று கொலைகளை செய்ததாக நம்பப்படுகிறது.
 
1964இல் ஒரு வழக்கை தீர்த்து வைப்பதற்கு எஃப்பிஐ-க்கு ஸ்கார்பா உதவியதை முன்வைத்து ஸ்கார்பா திரைப்படம் உருவாகிறது. ஸ்கார்பாவாக சில்வஸ்டர் ஸ்டாலோன் நடிக்கிறார். ப்ராட் ஃபர்மன் (Brad Furman)  படத்தை இயக்குகிறார்.
 
மில்லியனியம் ஃபிலிம்ஸுடன் இணைந்து இர்வின் விங்க்லர் ஸ்கார்பாவை தயாரிக்கிறார். இர்வின் ஸ்டலோனின் மைல்கல்லான ராக்கி படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்