புராண கதைப்படி, சிவனின் மனைவி பார்வதி, தன் மேனியில் பூசிய மஞ்சளை எடுத்து, சிறிது தைலத்தில் தோய்த்து குழைத்தாள். அதன் மீது கங்கை தீர்த்தம் தெளித்து உயிரூட்டினாள். உயிர்ப்பெற்ற அந்த மகவை தனது மகனாகவே எண்ணிய பார்வதி தேவியார், அவரையே தன் அந்தப்புர காவலராக நியமித்தார். அவருக்கு கணபதி என்று பெயரிட்டார்.
அப்போது பார்வதியைக் காண அங்கு வந்த சிவனை, புதுக்காவலரான கணபதி தடுத்தார். தன் தாயின் உத்தரவுப்படி, யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார். கோபம் கொண்ட சிவன் அவரது தலையை வெட்டினார். பார்வதி இதைக் கண்டிக்கவே, தனது பூத கணங்களை அனுப்பி முதலில் காணும் உயிரினத்தின் தலையை கொய்து வருமாறு கூறினார் சிவன்.
வியாசர் சொல்ல சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார் விநாயகப் பெருமான். தனக்கான இருப்பிடத்தைக் கூட மிக எளிமையாக அமைத்துக்கொண்டவர். அரசமரத்தடி முதல் நாம் உள்ளன்போடு நினைத்தால் உடனே காட்சி தர தெரு முனை முதற்கொண்டு வளம் வருபவர். பசுஞ்சாணத்தில் பிடித்து வைத்தாலும் அதிலும் காட்சி தரும் தெய்வம்.
தன்னை துதிப்போரின் சங்கடங்களை நீக்கியருளும் முழுமுதற் கடவுள். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் கிட்டும்.