திருப்பாவை பாடல் 16

வெள்ளி, 1 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை  பாடல் 16
 
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே, கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்,
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.


 
 
பொருள் :
 
பெண்கள் எல்லோரும் நந்தகோபரின் மாளிகை வாயிலில் நின்று, அதன் காவலர்களை வேண்டுவதாக அமைந்த பாடல்.
 
கோபாலர்களுக்கெல்லாம் தலைவராக இருக்கும் நந்தகோபருடைய அரண்மனைக் காவலனே! கொடியும் தோரணமும் கொண்ட வாயிலைக் காப்பவனே!
 
அழகிய மணிகள் கட்டிய கதவினைத் திறந்துவிடு. ஆயர் சிறுமிகளான எங்களிடம், "நாளை வாருங்கள். ஒலிக்கின்ற பாறையைத் தருகிறேன்" என்று நேற்றே, கண்ணன் வாக்கு தந்திருக்கிறான். பள்ளியெழுச்சி பாடி, கண்ணனை எழுப்புவதற்காகக் களங்கம் இல்லாதவர்களாக வந்திருக்கிறோம்.
 
முதன் முதலில் ஏதாவது மறுத்துச் சொல்லிவிடாதே. நெருக்கமாய் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் கதவை, தாய் உள்ளத்தோடு திறந்து விடு.

வெப்துனியாவைப் படிக்கவும்