தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
குபேர பூஜையை தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு.
சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையில், அதில் நவதானியங்கள், சொம்பில் சுத்தமான தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்த்து வைக்கவேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலையும், ஒரு தேங்காயை மஞ்சள் பூசி வைக்க வேண்டும்.
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வது மிக விசேஷம். குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும்.
தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.