பரமேஸ்வரன் விஷம் உண்டது, ஏகாதசி தினத்தில். அயர்ச்சியில் படுத்து, கண்ணுறங்கியது துவாதசியில். உலகமெலாம் உய்வுற தாண்டவம் ஆடியது திரயோதசி நாளில், அந்தி சாயும் நேரமான இந்தக் காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்கிறோம்.
14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள்.
சிவபெருமான் தாண்டவமாடியதைப் பார்த்த நந்திதேவர், ஆனந்த மிகுதியால் உடல் பருத்தாராம். அதன் காரணமாக, கயிலாயமே மறைந்ததாம். அதனால்தான், பிரதோஷ காலத்தில் நந்தி பகவானின் கொம்புகளின் ஊடாக சிவதரிசனம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
பிரதோஷ தினத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழி படலாம். மல்லிகை, வில்வம், மருக்கொழுந்து மலர்களை ஈசனுக்கு சூடக் கொடுக்கலாம். பச்சரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து, அதோடு வெல்லம் சேர்த்து, காப்பரிசியாக்கி நந்திக்கு நிவேத னம் செய்யலாம்.
ஈஸ்வரனுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம், பானகம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். இந்த பிரதோஷ தினத்தில் ஈஸ்வரனை வழிபட்டால் அவர் உள்ளம் குளிரும். நம் சோதனைகளைத் தவிடு பொடியாக்குவார்.