ஆனி மாதத்தில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி !!

வியாழன், 30 ஜூன் 2022 (10:43 IST)
அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறை சாக்த வழிபாடு. சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை.  ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். அதில் வாராஹி நவராத்திரி - ஆஷாட நவராத்திரி ஆகும்.


வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான். 12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.

அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள். நான்கு விதமான நவராத்திரிகள் உண்டு. வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

ஆனி மாதத்தில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி: வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.

விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்