மூணாறு

ஊட்டி, கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு.

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணாறு எனப் பெயர் பெற்றது.

முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது.

தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆணைமுடி சிகரம், மூணாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது.

ராஜமலைத் தொடரில்தான் அழிந்துவரும் விலங்கினமான வரை ஆடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளன. மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது.

மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம்.

இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாற்றிற்கு மதுரையில் இருந்தும், திருச்சூரில் இருந்தும் பேருந்தின் வாயிலாக செல்லலாம்.

குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாருவதற்கு அற்புதமான இடம்.

வெப்துனியாவைப் படிக்கவும்