தமிழகத்தில் கிழக்கு மலைத் தொடர்ச்சியும், மேற்கு மலைத் தொடர்ச்சியும் சந்திக்கும் அழகிய பகுதிகளில் ஒன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள மலைப்பகுதியாகும். சந்தன மரங்கள் நிறைந்த அழகிய வனப்பகுதி இது.
கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கடம்பூர் எனுமிடத்திற்கு செல்லும் மலைப்பாதையில் பயணம் செய்வது மனதிற்கு இதமான அழகிய அனுபவம்.
இரு புறங்களிலும் சிறிய பல நீர்வீழ்ச்சிகள். சிற்றோடைகள், மலைகளுக்கிடையே ஓடும் ஆறுகள், அடிவாரத்திலுள்ள அணை என கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்து படைப்பவை.
மலைப்பாதையில் ஆங்காங்கு சந்தன மரங்களையும் காணலாம். அமைதியான ஒரு சூழலில் அமைந்துள்ள இம்மலைப்பகுதி ஒரு நேரத்தில் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் பதுங்கி வாழ்ந்த இடங்களில் ஒன்றாகும்.
முக்கால் வட்டமாக சூழ்ந்துள்ள மலைகளில் விழும் மழை நீர் பெருக்கெடுத்து ஆறாகி பெருகிவர, அத்தண்ணீரை தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்த பெரும்பள்ளம் அணை.
webdunia photo
WD
இம்மலைகளின் உச்சியில்தான் கடம்பூர் எனும் மலைக் கிராம்ம் உள்ளது. இங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் ஊராளி என்ற பழங்குடியினர். நம்மோடு தமிழ் பேசினாலும், தங்களுக்கிடையே ஊராளி மொழி பேசுகின்றனர்.
இவர்கள் இன்னமும் பழமையான முறையில் கட்டப்பட்ட ஒலை குடிசைகளில்தான் வசித்து வருகின்றனர். பத்துப் பதினைந்து குடும்பங்கள் ஒன்றாக ஓரிடத்தில் குடிசையமைத்து வாழ்கின்றனர். இவர்களுடன் ஆடு, மாடுகள், கோழிகள் என இனிமையான இயற்கை வாழ்வு வாழ்கின்றனர்.
விடியலில் இருந்து இரவு வரை எப்போதும் பறவைகளின் கீச்சுக் குரல்கள். இடையறாது வீசும் குளிர்க்காற்று. மாசற்றச் சூழல். ஊரைக் கடந்து சென்று மலைப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு இடையே செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று பார்க்க வேண்டும்... உன்னதமான காட்சி.
எப்படிச் செல்வது?
ஈரோட்டிலிருந்து 60 கி.மீ. தூரத்திலுள்ளது சத்தியமங்கலம். மிகவும் முன்னேறிய நகரப்பகுதி. கல்வி, வணிகம், விவசாயம் செழிக்குமிடமாதலால் தங்குவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.
webdunia photo
WD
சத்தியமங்கலத்தில் தங்கிக்கொண்டு ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு இவ்விடத்திற்குச் சென்று வரலாம். மதிய உணவு கொள்வதற்கு சாப்பாட்டுக் கடை ஒன்று உள்ளது. கரண்டி முட்டை தனிச் சுவை.