மூலிகை மருத்துவப் பயிற்சி!

திங்கள், 17 நவம்பர் 2008 (15:55 IST)
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது இந்த பல்கலைக்கழகத்தின் வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித் துறை சார்பில் அளிக்கப்படுகிறது. இதன் பயிற்சி காலம் ஆறு மாதங்கள்.

மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சி பெற 10 ஆம் வகுப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒரு வகுப்புக்கு 20 பேர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் பயிற்சி அளிக்கப்படும். மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும்.

இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் மற்றும் முதல் உதவி பயிற்சியுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும்.

மூலிகை மருத்துவ பயிற்சியில் சேர விரும்புவோர், விண்ணப்பங்களுக்கு மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாலை நேரக் கல்லூரி வளாகத்தில் செய்லபடும் பல்கலை. வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித் துறை இயக்குநரை (பொறுப்பு) அணுகலாம்.

விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புவோர் ரூ.50 விண்ணப்பக் கட்டணத்தை மணியார்டர் மூலம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

மணியார்டர் படிவத்தில் வீட்டு முகவரி மற்றும் மூலிகைப் பயிற்சி விண்ணப்பம் என்பதையும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் சுயமுகவரியிட்ட ரூ.5 க்கான தபால்தலை ஒட்டிய உறையை இணைத்து அனுப்ப வேண்டும். உறையின் மேல் பயிற்சியின் பெயரையும் குறிப்பிட வேண்டும்.

மற்ற விவரங்களுக்கு 0452-2537838 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று இந்த துறையின் இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் ஆர்.முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்