டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!

திங்கள், 19 அக்டோபர் 2015 (22:07 IST)
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
 

 
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.
 
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.
 
மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.
 
டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன.
 
இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.
 
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
 
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.
 
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள் மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.
 
நாம் நமது உள்மனம் என்னும் வீணையை பெரும்பாலும் தவறாகவே மீட்டுகிறோம். அதனால் வேண்டாத எண்ணங்கள், வேண்டாத செயல்கள், வேண்டாத விளைவுகள்... வாழ்வே வீணாகும் வீணையாகிவிடுகிறது.
 
வெளிமனம் டென்ஷன் ஏற்பட்டவுடன் இறுக்கமான எண்ணங்களை உள் மனதிற்கு அனுப்புகிறது. இதனால் உள்மனதிலும் இறுக்கம் ஏற்படுகிறது. நம் உடல் இயக்கங்கள் தாறுமாறாக சீர்கெட்டு இயங்குகின்றன. ஏனென்றால், நமது உள்மனதின் கட்டுப்பாட்டில்தான் தானியங்கி நரம்பு மண்டலம் இயங்குகிறது.
 
உள் மனம் தாறுமாறாக இயங்கும்போது உடலின் இயக்கங்கள் சீர்கெட்டு, சுரப்பிகள் தாறுமாறாக சுரந்து நாம் பலவித மன நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் ஆளாகிறோம். இந்த வகை நோய்களை எந்த மருந்தும் குணப்படுத்துவதில்லை.
 
ஏனென்றால், இங்கு வியாதி உடலில் இல்லையே. உள் மனதை சரியானபடி மீண்டும் இயங்க வைத்தால் மனமும், உடலும் தானே சரியாகிவிடும். நீங்களே கவனியுங்கள். டென்ஷன் ஏற்பட்டவுடன் என்னவெல்லாம் நடக்கின்றன? இரத்தக் கொதிப்பு ஏறுகிறது. ஒற்றைத் தலைவலி, அல்சர் எல்லாமே உண்டாகிறது.
 
அளவுக் கதிகமான கோபம் உண்டாகிறது. கண்ட்ரோல் செய்ய முடியாமல் கத்துவது, அடிப்பது, எதையாவது போட்டு உடைப்பது என்று நம் நிலை இழந்து மன நோயாளி போல் செயல்படுகிறோமே - இது தேவைதானா?
 
நல்ல மென்மையான இசை டென்ஷனை குறைக்கிறது. நம் நரம்புகள் விறைத்துப்போய் உடல் கல்லாக ஆகிவிடும்போது இசை அதை கனிய வைக்கிறது. எப்படித் தெரியுமா? நம் உடலெங்கும் கேட்கும் சக்தி பெற்ற நரம்புகள் நிறைந்துள்ளன.
 
காது மட்டும் எந்த இசையையும், ஓசையையும் கேட்பதில்லை. உடலே கேட்கிறது, அதனால்தான் அதிக இரைச்சலை கேட்கும்போது நரம்புகள் இறுக்கமகி டென்ஷன் ஏற்படுகிறது. சோர்ந்த மனதை சுறுசுறுப்பாக்க இசை உதவுகிறது. இசையோடு சேர்ந்த ஹிப்னோதெரபியும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்