சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது!

அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன்

திங்கள், 27 அக்டோபர் 2014 (19:00 IST)
“நான் அடிக்கடி யூரின் போறேன். அடிக்கடி என்றால் 5 நிமிடம், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போகிறேன். போனால் நான்கு ஐந்து சொட்டுதான் வருகிறது. சிறுநீர் வராவிட்டாலும் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது. நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிட்டு, பாத்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த இரவு நேர இன்னல்களால் என் தூக்கம் தொலைந்ததும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறேன். மேலும் இருமினால், தும்மினால், குலுங்கிச் சிரித்தால் யூரின் வெளியேறிவிடுகிறது என்றார்.”
 
தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால்களின் பின்பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு, ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள் என்றார்.
 
உங்களுடைய சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம்... ஆமாம்... என்றார்.
 
பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)
 
நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வலிகளும் வரத்தான் செய்யும். நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.
 
சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்துவிடலாம். சிறுநீர்ப் பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 
 
இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத்தான் தாக்கும். பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச்செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்கவேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.
 
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் ஏற்படும் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!

அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை

வெப்துனியாவைப் படிக்கவும்