மாரடைப்பு ஏற்படாமல் இருக்க...

வியாழன், 13 நவம்பர் 2008 (12:09 IST)
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போதிய அளவைக் காட்டிலும், குறைவான நேரம் தூங்கினால், அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்தம் உடைய சுமார் ஆயிரத்து 255 பேரிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 33-97 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டதாகவும், சராசரியாக 50 மாத காலத்திற்கு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 99 பேருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டதோடு, சிலர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இரவில் குறைந்தது ஏழரை மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கியவர்களில் 68 விழுக்காட்டினருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்பட்டதாகவும், குறிப்பிட்ட அளவுக்கு தூங்கியவர்களுக்கு அந்த பாதிப்பு அவ்வளவாக இல்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தவிர இரவு நேரத்தில் உயர் இரத்த அழுத்தம் குறையாமல் இருந்தவர்களுக்கே மாரடைப்பு வாய்ப்புகள் அதிகம் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மிகவும் குறைந்த நேரமே தூங்கியவர்களில், இரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்புகள் மற்றவர்களைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம் என்றும் தெரிய வந்துள்ளது.

தவிர குறைந்த நேரம் தூங்குவதால் சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்கம் குறைவதால் உடலின் நரம்பு மண்டலத்தில் நாள் முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நரம்பு மண்டல பாதிப்பு, இதயக் கோளாறுக்கு வித்திடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்