தூக்கம் குறைவதால் புற்றுநோய் வாய்ப்பு?

வெள்ளி, 21 நவம்பர் 2008 (17:17 IST)
புற்றுநோயைத் தவிர்ப்பதற்காக வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யும் பெண்கள், குறைந்த அளவு தூக்கத்தை மேற்கொள்வதால் உடற்பயிற்சியின் பலன் கிடைக்காத நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதாவது புற்றுநோயின்றி வாழ வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு தூக்கம் அவசியமாகிறது.

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அன்றாடம் உடற்பயிற்சியை தொடரும் பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இல்லை என்று தெரிய வந்தது. ஆனால், பெண்கள் மத்தியில் தூக்கமின்மையால் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வேறுசில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது முதல் 65 வயது வரையிலான சுமார் 5 ஆயிரத்து 968 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது, பெண்களின் தூங்கும் தன்மை, உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்றவை பரிசோதிக்கப்பட்டது. பெண்களின் புற்றுநோய் ஏற்படும் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

வாரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சி அவர்களின் புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 47 விழுக்காடு அளவு புற்றுநோய் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறைந்த அளவே தூக்கம் இருப்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தற்போது புற்றுநோய் வாய்ப்புகள் உள்ளதாக வெளிவந்துள்ள தகவலும் குறிப்பிடத்தக்கதாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்