செட்டிநாடு மருத்துவமனையில் அரிய இதய ஆபரேஷன்

சனி, 23 மே 2009 (15:38 IST)
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி டாக்டர்கள், பல்மோனரி த்ரோம்போ எண்டட்ரியேக்டோமி (PTE) என்ற அரிய இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளனர்.

webdunia photoWD
அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளியுடன், அறுவை சிகிச்சையின் தன்மை குறித்து சென்னையில் டாக்டர் ஆர். ரவிக்குமார் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

கடந்த 12ஆம் தேதியன்று (மே) 54 வயதான ஒருவருக்கு பல்மோனரி த்ராம்போ எண்டட்ரியேக்டோமி அறுவை சிகிச்சையை இந்த மருத்துவமனையில் மற்ற டாக்டர்களின் உறுதுணையோடு வெற்றிகரமாக நடத்தி சாதனை புரிந்துள்ளார் டாக்டர் ஆர். ரவிக்குமார்.

சம்பந்தப்பட்ட நோயாளிக்கு மூச்சுவிடுவதில் பிரச்சினை, இதயம் தொடர்பான பிரச்சினை, தலைசுற்றல் போன்றவை கடந்த 4 மாத காலமாக இருந்துள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த சம்பந்தப்பட்டவர் நலமுடன் குணமடைந்து வருவதாக டாக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.

webdunia photoWD

வெளிநாடுகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த அறுவைச் சிகிச்சை தற்போது முதல் முறையாக சென்னையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற இதய பாதிப்பு உள்ளவர்கள் இனி இங்கேயே தரமான ஏற்கக்கூடிய கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்மோனரி உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தின் வலப்புறம் செயலிழப்பதால் இந்த வகை பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது செய்யப்பட்டுள்ள இதய அறுவை சிகிச்சையால் நோயாளி அடுத்த 2 -3 மாத காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்றார் அவர்.

சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை என்பதால், அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளியை 18 டிகிரி செல்சியஸ் குளிர் நிலைக்குக் கொண்டு சென்று, அதன் பிறகு சுமார் 45 நிமிட அறுவை சிகிச்சை முடிந்த பின் மீண்டும் நோயாளியை இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஹைபோதெர்மிக் சர்குலேட்டரி அரெஸ்ட் எனப்படும் உடலை குளிர்விப்பதால், இதயம் செயல்படுவது நின்று விடுவதோடு, உடலின் ரத்த ஓட்டமும் நின்று விடும். குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சையை செய்து முடிக்க வேண்டும் என்று டாக்டர் ரவிக்குமார் விளக்கம் அளித்தார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின் நோயாளிகள் மூச்சு விட சிரமப்படத் தேவையில்லை. தவிர இதயத்தின் வலப்புற செயல்பாடின்மையும் நீக்கப்படுகிறது என்று டாக்டர் ஆர். ரவிக்குமார் குறிப்பிட்டார்.
webdunia photoWD

செட்டிநாடு ஹெல்த் சிட்டி பன்முக சிறப்பு நவீன மருத்துவமனையில் உள்ள பிரத்யேக வசதிகளை அதன் தலைமை செயல் அதிகாரி டாக்டர் வெங்கட் பனிதர் எடுத்துக் கூறினார்.

இந்த மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை பிரிவு இந்தியாவில் மட்டுமல்லாது, ஆசியாவிலேயே ரோபோ உதவியுடன் செயல்படக்கூடியது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தவிர தமிழகத்திலேயே பிடிஇ அறுவை சிகிச்சை செய்யப்படும் ஒரே மருத்துவமனையும் இதுதான் என்றார் டாக்டர் வெங்கட் பனிதர்.

மருத்துவமனையின் இதய நோய் பிரிவின் தலைவர் பிரவீன் நாயர், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி, இந்த அரிய அறுவை சிகிச்சைக்கு உதவிய டாக்டர்கள், செவிலியர்கள் குழுவும் பேட்டியின் போது உடனிருந்தனர்.