ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.96,500 கோடி அபராதம்: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பாதிப்பு

திங்கள், 5 செப்டம்பர் 2016 (15:43 IST)
உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.96,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அயர்லாந்தில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், சட்ட விரோதமாக பல வரிச் சலுகைகளை அந்த நாட்டு அரசிடம் பெற்றுள்ளது என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு குற்றம் சாட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அயர்லாந்தில்  தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான வரிச் சலுகையை அறிவித்துள்ளது. ஆனால் இது ஐரோப்பிய யூனியன் சில விதிமுறைகளுக்கு எதிரானதாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அளித்த சலுகை முறைகேடானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் மட்டுமே வரியாக ரூ. 96,500 கோடியை அபராதமாக அயர்லாந்துக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு உத்தரவிட்டது. மேலும் இது அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை இல்லை என்றும் இந்த நடவடிக்கையால் அமெரிக்க நிறுவனங்களைவிட ஐரோப்பிய நிறுவனங்கள்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜான் கிளோட் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்