பாஸ்போர்ட் இனி தபால் அலுவகங்களில் கிடைக்கும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:08 IST)
பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்லாமல் அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  
பாஸ்போர்ட் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் பல மாற்றங்களை புதுமைகளை செய்த போதும், அதிக விண்ணப்பங்களை செயல் படுத்தவும், புதிய பாஸ்போர்ட் வழங்குவதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு போதிய ஊழியர்கள் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது. 
 
இதனால் இனி அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெற்று, தக்க ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தரலாம். பாஸ்போர்ட் விநியோகமும் தபால் அலுவலகம் மேற்கொள்ளும். 
 
இத்திட்டம் முதலில் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது  குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் கையாளும் முறை மூன்று கட்டமாக நடக்கிறது. 
 
இப்போது தபால் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பம் தந்தவுடன், இதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு, பாஸ்போர்ட்டை தபால் அலுவலகம் ஸ்பீடு போஸ்ட் மூலம் வழங்கும் என்று தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்