சக்தி மசாலா நிறுவனத்திற்கு ராஜீவ் காந்தி தேசிய தர விருது

புதன், 27 ஆகஸ்ட் 2014 (20:24 IST)
தமிழகத்தில் உள்ள பிரபல சக்தி மசாலா நிறுவனம், ராஜீவ் காந்தி தர விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, ஆகஸ்டு 26 அன்று வெளியிடப்பட்டது. 2012ஆம் ஆண்டிற்கான பெருமைக்குரிய 19ஆவது ராஜீவ் காந்தி தேசிய தர விருது மற்றும் பாராட்டுப் பத்திரங்களையும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.
 
பெங்களூரில் உள்ள ரயில் சக்கரத் தொழிற்சாலை, அனைத்திலும் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு, ஈரோட்டை சார்ந்த தனியார் நிறுவனமான சக்தி மசாலா, ஹைதராபாத்தில் உள்ள டாடா பிஸ்னஸ் சப்போர்ட் சர்விஸஸ் லிமிடட் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சோலன் பகுதியில் உள்ள எலின் அப்பளையஸன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மற்ற பிரிவைச் சார்ந்த வெற்றியாளர் விருதை வென்றுள்ளன. 
 
இதைத் தவிர்த்து, பல்வேறு பிரிவுகளில் ஒன்பது நிறுவனங்களுக்குப் பாராட்டு பத்திரங்களும் வழங்கப்படும்.
 
இந்த விருதுக்காகப் பல்வேறு துறைகளில் இருந்து மொத்தம் 63 விண்ணப்பங்கள் வந்தன. இதில் விருது மற்றும் பாராட்டுப் பத்திரத்திற்கான வெற்றியாளர்களைப் பல்வேறு துறைகளைச் சார்ந்த பயிற்சி பெற்றவர்களைக் கொண்ட குழு தேர்வு செய்தது. இந்த விருதுகளை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் வழங்குவார். 
 
இந்திய உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் தரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்