வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் பெறுவது எப்படி??

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (10:11 IST)
அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தற்போது அரசு ஆன்லைனில் இ - சேவை மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டையை பெறும் வசதியை துவங்கி உள்ளது.



ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

http://eci-citizenservices.nic.in/default.aspx என்ற இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க வேண்டும்.

‘verification code’ என்ற குறுஞ்செய்தி வந்ததும், அதனை இணையதளத்தில் கொடுத்தால் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்து பதிவு செய்யவும்.

பின்னர் கைபேசியில் உறுதிப்படுத்தும் செய்தி வரும். பின்னர், ‘online application’ என்பதை கிளிக் செய்து விவரங்களைக் பதிவு செய்ய வேண்டும்.

http://www.elections.tn.gov.in/eregistration/ என்ற தளத்திலும் விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும்.

உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

வாக்காளர் அட்டையில் புகைப் படம் மாற்ற வேண்டுமா?

இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPICCENTREADDRESS1.pdf என்ற தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்த வேண்டும். இதனுடன், ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படம் இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்:

வாக்காளர் அட்டையில் நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்:

இதற்கு படிவம்-8 ஐ பயன்படுத்த வெண்டும். அடையாளச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் பதிவை இடமாற்றம் செய்யவும் படிவம்-8 ஐ பயன்படுத்த வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்