இனி லைசென்ஸ், ஆர்சி புக் கையில் தூக்கிச் செல்ல வேண்டாம்... விரைவில் டிஜிலாக்கர் அறிமுகம்

புதன், 7 செப்டம்பர் 2016 (17:19 IST)
டிஜிலாக்கர் என்று அழைக்கப்படும் மின்னணு ஆவண பாதுகாப்பு பெட்டகம் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் தரும். இந்த வசதி மூலமாக, இனி அரசு துறைகளில் காகிதமில்லா ஆவண புரட்சிக்கு வித்திடும் என்று கருதப்படுகிறது.


 
 
குறிப்பாக, இந்த வசதி வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில், வாகன ஓட்டிகள் ஆவணங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவைப்படும் நடைமுறை சிரமங்களை இந்த டிஜிலாக்கர் வசதி முற்றிலும் ஒழித்துவிடும்.
 
மத்திய போக்குவரத்து அமைச்சகமும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த சேவையை வழங்குகின்றன. இது ஆன்லைனில் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் தொழில்நுட்பம். கூகுள் டிரைவ் போன்றே இந்த வசதி தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. 
 
மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிநபர் சான்றுகள், ஆவணங்களை இந்த டிஜிலாக்கர் மூலமாகவே நேரடியாகவே பெற முடியும். இதன்மூலமாக, டிரைவிங் லைசென்ஸ் பெறுதல், வாகன பதிவு ஆவணம் போன்றவற்றை எளிதாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இது பயன்பாட்டுக்கு வந்த பின், வாகன தணிக்கையின்போது, மொபைல்போனில் இருக்கும் டிஜிலாக்கர் செயலி மூலமாகவே ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை சம்பந்தப்பட்ட தணிக்கை அதிகாரியிடம் காட்டலாம்.
 
இதேபோன்று, சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கும் இந்த செயலி மூலமாகவே தகவல் அளித்து, அபராதத்தை செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டிஜிலாக்கரை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது மொபைல்போன் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து கணக்கை துவங்கிக் கொள்ளலாம்.
 
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. தெலங்கானா மற்றும் டெல்லியில் இந்த வசதி முதலில் நடைமுறைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்