உயர்ந்தது கச்சா எண்ணெய்யின் விலை: மீண்டும் பெட்ரோல், டீசலின் விலை உயர வாய்ப்பு

புதன், 18 பிப்ரவரி 2015 (09:03 IST)
கச்சா எண்ணெய்யின் விலை உயர ஆரம்பித்துள்ளதால், மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல்  கச்சா எண்ணெய், விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அது ஒரு பீப்பாய் (பேரல்) 45 டாலருக்குக் கீழ் குறைந்தது.  இதனார், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டன.
 
இந்நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை உயர ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டின் உச்ச விலையாக 62 டாலரை எட்டியுள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தொய்வு நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் விலைஉயர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
அத்துடன், லிபியாவில் கடந்த திங்கட்கிழமையன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
 
மேலும், குர்திஸ்தான் அரசு, பாக்தாத் பட்ஜெட்டின் ஒரு பகுதியை ஒதுக்காவிட்டால் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று எச்சரித்திருப்பதும் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பெட்ரோமேட்ரிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதனால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்ககது.

வெப்துனியாவைப் படிக்கவும்