808 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை

சனி, 4 ஜூலை 2009 (10:48 IST)
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் தாக்கல் செய்த 2008-09 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், விவசாயப் பிரிவிக்கான கடன் இலக்கில் 94 விழுக்காடு வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி விவசாயம், அதனை சார்ந்த துறைகளுக்கு அனைத்து வங்கிகள் மூலமாக ரூ.2,64,455 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இது ரூ.2,80,000 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கில் 94.4 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது.

2008 மார்ச் கணக்கின்படி ரூ.2,54,657 கோடி வழங்கியிருப்பதை ஒப்பிடுகையில், விவசாயத் துறைக்கு ரூ.9798 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த நிதியுதவியில் வர்த்தக வங்கிகள் மூலமாக ரூ.2,02, 856 கோடியும், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.35,447 கோடிகயும், மண்டல கிராம வங்கிகள் மூலம் ரூ.25,865 கோடி வழங்கப்பட்டுள்ளன.

2008-09 ஆம் ஆண்டில் (2009 பிப்ரவரி வரை) மொத்தம் 47.26 லட்சம் விவசாய கடன் அட்டைகள் மூலம், ரூ.26,828 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2009 பிப்ரவரி மாதம் வரையிலான கணக்கின்படி நாட்டில் 808 லட்சம் விவசாயிகள் விவசாய கடன் அட்டை வைத்துள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டத்தின் கீழ் வர்த்தக வங்கிகள், மண்டல கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு முதல் தவணையாக அரசு ரூ.25 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. இதில் மண்டல கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.17,500 கோடி தற்காலிக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக வங்கிகளுக்கு ரூ.7,500 கோடி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்