ஹட்கோ வட்டி விகிதம் குறைப்பு

புதன், 24 ஜூன் 2009 (13:51 IST)
புதுடெல்லி: தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனம் (Housing and Urban Development Corporation Limited - ஹட்கோ) தனது வட்டி விகிதத்தை அரசு மற்றும் தனியார் துறையினருக்கு 1.25 விழுக்காடு வரை குறைத்துள்ளது. இது நேற்று முதல் (23.06.2009) அமலுக்கு வந்துள்ளது.

மத்திய வீட்டு வசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா சமீபத்தில் ``ஏழைகளுக்கு வீடு'' என்ற தனது தொலைநோக்குத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். குறைந்த விலையில் வீடுகள், ஏழைகளுக்கு குறைந்த வட்டியில் ஹட்கோ மூலம் கடனுதவி உள்ளிட்டவை அமைச்சரின் திட்டத்தில் அடங்கும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான (சிறப்பு பிரிவு - விதவைகளுக்கு, எஸ்சி/எஸ்டி) வட்டி விகிதம் 9.50 விழுக்காட்டிலிருந்து, 8.50 விழுக்காடாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற பிரிவினருக்கு வட்டி விகிதம் 9.75 விழுக்காட்டிலிருந்து 8.75 விழுக்காடாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக ஹட்கோ அறிவித்துள்ளது.

மத்திய வீட்டு வசதி & நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் ஹட்கோ இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2009-10-ம் ஆண்டில், அனுமதிக்கப்படவுள்ள வீட்டு வசதி கடனில் 84 விழுக்காடு பொருளாதாரத்தில் பின்தங்கியோர், குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வீட்டு வசதி கடன் தொகையில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு 95 விழுக்காடு வீடுகளுக்கு ஹட்கோ நிதியுதவி அளிக்க முடியும்.

மேலும் பொதுத் துறை கடன்தாரர்களின் வர்த்தகத் திட்டங்கள், மாநில அரசுக்கான கடன்கள், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மற்றும் மின்வசதி திட்டங்கள், தனியார் துறை திட்டங்கள் ஆகியவற்றுக்கும் வட்டி விகிதம் 1.25 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்