ஸ்பைஸ் ஜெட் வாங்கலில் 2ஜி ஊழல் பணம்? ம.பு.க. ஆராய்கிறது

வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (11:54 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), அந்த முறைகேட்டால் கிடைத்த ஊழல் பணம், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனால் ஸ்பைஸ் ஜெட் பங்கு வாங்கலில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் குறைந்த விலையில் விமான சேவை நடத்தும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 37.75% பங்குகளை கலாநிதி மாறன் வாங்கினார். ஆனால் இதற்கான பேரம் அதற்கு முன்னரே நடந்து வந்ததாக கூறப்படுகிறது. ஸ்பைஸ் ஜெட் பங்குகளை வாங்கிய நிதி, 2ஜி ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் இருந்து கிடைத்ததா என்ற அடிப்படையில் மத்திய புலனாய்வுக் கழகம் விசாரித்து வருவதாக அச்செய்திகள் கூறுகின்றன.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் விசாரணை நடத்தியபோது, இதுபற்றி ம.பு.க. அதிகாரிகள் வினா எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக இருந்த ஆ.இராசாவிற்கு முன்னர், அப்பொறுப்பை வகித்தது தற்போது ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்