ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் புத்துயிர்ப்பு -மத்திய அரசு

வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (12:28 IST)
FILE
நாட்டின் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான "ஸ்கூட்டர்ஸ் இந்தியா" நிறுவனத்துக்கு ரூ.200 கோடியில் புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விஜய் சூப்பர் என்ற பெயரில் இந்தியாவிலும், லாம்பிரட்டா என்ற பெயரில் வெளிநாடுகளுக்கும் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.

தனியார் நிறுவனங்களின் போட்டியால், "ஸ்கூட்டர்ஸ் இந்தியா" தயாரிப்புகள் சரியாக விற்பனையாகவில்லை. இதனால் இந்த நிறுவனம் நஷ்டத்தில் மூழ்கியது. இதையடுத்து, 1997 ஆம் ஆண்டில் இரு சக்கர வாகன தயாரிப்பை இந்நிறுவனம் கைவிட்டது. விக்ரம் என்ற பெயரில் ஆட்டோக்களை மட்டும் தற்போது இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. தொடர் நஷ்டத்தில் இருக்கும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா, நலிவடைந்த பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இதில் 1,200 நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு ரூ.200 கோடியில் புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு தன்னிடம் உள்ள "ஸ்கூட்டர்ஸ் இந்தியா" நிறுவன பங்குகளை (ரூ.95.38 கோடி) தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருந்தது. பின்னர், அது நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புத்துயிர் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்