வேளாண் உற்பத்தி, நிதிப் பற்றாக்குறை குறைப்பு மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்: அலுவாலியா

வெள்ளி, 22 ஏப்ரல் 2011 (16:07 IST)
ரூபாயின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 9 விழுக்காடாக அதிகரித்துள்ள நிலையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர நிதிப் பற்றாக்குறையை குறைக்கவும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதுமே வழி என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திட்ட ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாண்டெக் சிங் அலுவாலியா இவ்வாறு கூறியுள்ளார்.

“உலக அளவிலும், இந்தியாவிலும் பணவீக்கமே பலவீனமான விடயமாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். இதனை நிதி சம நிலையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே குறைக்க முடியும். நிதிப் பற்றாக்குறையை கட்டுக்குள் நிறுத்துவதும், வேளாண் உற்பத்தியைப் பெறுக்குவதுமே வழிகள் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்” என்று அலுவாலியா கூறியுள்ளார்.

தற்போது 5.1 விழுக்காடாக இருக்கும் நிதிப் பற்றாக்குறையை 4.6 விழுக்காட்டிற்கு கொண்டு வருவது என்றும், கடந்த நிதியாண்டில் 5.6 விழுக்காடாக இருந்த வேளாண் உற்பத்தியை இந்த நிதியாண்டில் 4 விழுக்காடு வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதே அதற்கான வழியாகும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்